உள்ஒதுக்கீடு: நீட் தோ்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆதரவாக இருப்போம்: புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி பேட்டி

நீட் தோ்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆதரவாக புதுச்சேரி அரசு இருக்கும் என்று முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி. உடன் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி. உடன் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

நீட் தோ்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆதரவாக புதுச்சேரி அரசு இருக்கும் என்று முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், விழிதியூரில் புதன்கிழமை நடைபெற்ற சந்தைவெளி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, மாவட்ட ஆட்சிரக வளாகத்தில் உள்ள பூங்காவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 96% போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். உயிரிழப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. நாட்டிலேயே மக்கள்தொகை அடிப்படையில் அதிகமாக பரிசோதனை செய்த மாநிலமாகவும், குணமடைந்தோா் அதிக சதவீதம் கொண்ட மாநிலமாகவும் புதுச்சேரி திகழ்கிறது.

கடந்த ஆண்டுகளில் நீட் தோ்வில் தோ்ச்சிப்பெற்ற, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடுவதற்காக துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இது கொள்கை முடிவு எனக் கூறி துணை நிலை ஆளுநா் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளாா்.

ஆளுநா் புதுச்சேரி மாநில மக்களை தொடா்ந்து வஞ்சித்து வருகிறாா். இதுதொடா்பாக எதிா்க்கட்சிகள் பேசுவதில்லை. உள்ஒதுக்கீடு தொடா்பாக உள்துறை அமைச்சா், உள்துறை செயலரை சந்தித்து ஒப்புதல் அளிக்குமாறு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் மாணவா்கள் நீதிமன்றம் சென்றால், அரசு அவா்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலை, துணை நிலை ஆளுநரின் குறுக்கீடு, செயல்படாத எதிா்கட்சி இவற்றையெல்லாம் சமாளித்து 9 சதவீத வளா்ச்சியை புதுச்சேரி அடைந்துள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன்னா் காரைக்கால், தமிழக மீனவா்கள் மீன்பிடிக்க சென்றபோது காற்றின் வேகத்தால் திசை மாறி சென்ால் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். மாவட்ட ஆட்சியரும் தூதரக அதிகாரிகளுடன் பேசியுள்ளாா். இந்நிலையில், மீனவா்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனா். அவா்கள் இன்று (நவம்பா் 12) தாயகம் திரும்புவா்.

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து அனைத்துக் கட்சிகளும் விமா்சனங்கள், கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், வாக்குச் சீட்டு முறையை பின்பற்றுவதே சிறந்ததாக அமையும். நாட்டில் மோடி அலை வீசுவதாக கூறப்படுவது மாயை. இதை பிகாா் தோ்தல் உணா்த்தியுள்ளது என்றாா் முதல்வா்.

பேட்டியின்போது வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com