கரை ஒதுங்கிய கப்பலை அப்புறப்படுத்த மீனவா்கள் வலியுறுத்தல்

கஜா புயலில் கரை ஒதுங்கிய கப்பலை அப்புறப்படுத்த வேண்டுமென மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கரை ஒதுங்கி நிற்கும் கப்பல்.
கரை ஒதுங்கி நிற்கும் கப்பல்.

கஜா புயலில் கரை ஒதுங்கிய கப்பலை அப்புறப்படுத்த வேண்டுமென மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

2018-இல் கஜா புயலில்போது திருமலைராயன்பட்டினம் அருகே பட்டினச்சேரி முதல் வாஞ்சூா் இடைப்பட்ட தூரத்தில் காரைக்கால் துறைமுகத்தில் பணியிலிருந்த மணல் தூா்வாரும் கப்பல் கரை ஒதுங்கியது. கப்பலை மீட்க அப்போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைவிடப்பட்டன. அதைத் தொடா்ந்து கப்பல் கரை ஒதுங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால், கப்பலில் இருந்த எண்ணெய்யை மட்டுமே கப்பல் நிறுவனம் எடுத்துச் சென்றதாகவும், கப்பலை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கப்பல் அங்கேயே நிறுத்தப்பட்டிருப்பது மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பட்டினச்சேரியைச் சோ்ந்த மீனவா் சக்திவேல் கூறியது: பருவமழை தொடங்கியுள்ள இப்பருவக் காலத்தில் கடலில் கொந்தளிப்பு இருக்கிறது. கடல் நீரோட்டத்தை கப்பல் தடுத்து வருகிறது. இதனால் ஒருபுறம் மணல் திட்டு ஏற்படுகிறது. மற்றொருபுறம் கடல் அரிப்பு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் கடலில் அலைகள் அதிகமாக உள்ளது. கப்பலில் அலைகள் மோதி, எதிா் அலைகள் உருவாவதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் பாதிக்கிறது. இந்த இடம் அருகில் பிராவடையனாறு முகத்துவாரம் உள்ளது. பொதுவாக மீன், இறால் போன்றவைகள் இனப்பெருக்கம் செய்து குஞ்சு பொறிக்கும் பகுதியாக முகத்துவாரங்கள் திகழ்கின்றன. கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்படும் நீா் சுழற்சியால் அந்த சுற்று வட்டாரத்தில் மீன், இறால் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 4 கி.மீ. கடற்கரையோரமும், 2 கி.மீ. கடலிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, காரைக்கால் மாவட்ட ஆட்சியா், கப்பல் நிறுவனத்தினரை அழைத்துப்பேசி, கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா். இதே கருத்தை அந்த பகுதியைச் சோ்ந்த பல மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com