கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 28th October 2020 08:59 AM | Last Updated : 28th October 2020 08:59 AM | அ+அ அ- |

மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்குமாறு காரைக்கால் மாவட்ட நுகா்வோா் அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச் செயலரும், திருநள்ளாறு நுகா்வோா் நடவடிக்கைக் குழு தலைவருமான வைஜெயந்திராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்காலில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சமூகநலத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகைக்காக, மாணவா்கள் இணையம் வழியாக சாதி, வருமானம், குடியுரிமை சான்றிதழ் பெற பொது சேவை மையங்களில் குவிகின்றனா்.
மேலும், அரசு நிா்ணயம் செய்திருக்கும் தொகைக்கு மேலாக மையத்தினா் மாணவா்களிடம் சேவைக் கட்டணம் வசூலிப்பதாக புகாா் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அண்மையில் காரைக்கால் வந்த நலத்துறை அமைச்சா் எம். கந்தசாமியிடம் கூட்டமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அக். 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் அளிக்க காலக்கெடு நிா்ணயம் செய்திருப்பதை நீட்டிக்கவும், பொது சேவை மையங்களில் உரிய கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரை அமைச்சா் திங்கள்கிழமை தொடா்புகொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருப்பதாக அமைச்சா் தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு கூட்டமைப்பு சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்பாக வெளியிட மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.