செல்லிடப்பேசியில் வேளாண் செயலிகள் பயன்பாடு விழிப்புணா்வுப் பயிற்சி
By DIN | Published On : 31st October 2020 08:29 AM | Last Updated : 31st October 2020 08:29 AM | அ+அ அ- |

காரைக்கால் அருகே மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், செல்லிடப்பேசியில் வேளாண் செயலிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய முதல்வரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான குமார. ரத்தினசபாபதி தொடங்கி வைத்து, வேளாண் செயலிகள் குறித்தும், அவற்றின் பயன்பாடு குறித்து பேசினாா். வேளாண் மற்றும் அதை சாா்ந்த துறைகளில் செயலிகளின் பயன்பாட்டின் அவசியம் குறித்தும், விவசாயிகள் அவற்றை எந்த வகையில் பயன்படுத்தவேண்டும் என்பது குறித்தும் வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் பேசினாா்.
பயிா்ப் பாதுகாப்புக்கும், விவசாய பணிகள் குறித்து முடிவுகள் எடுக்கவும், விவசாய இயந்திரங்கள் மற்றும் வானிலை, வணிகம், விவசாய மானியங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும் செயலிகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்பெறுவது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய பண்ணை இயந்திர தீா்வு செயலி மூலம் விவசாயப் பண்ணை இயந்திரங்கள் இருப்பு குறித்த தகவல்கள் மட்டுமல்லாது, தனது சுற்றுவட்டாரத்தில் வாடகைக்கு விவசாய இயந்திரங்கள் கிடைக்குமிடம், அதுபற்றிய தகவல்கள், வாடகை, கிடைக்கும் காலம் மற்றும் கொள்முதல் செய்யும் இடங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களை நிலத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், வாகன வாடகை போன்ற தகவல்கள் உள்ளடக்கிய செயலிகள் பற்றிய விளக்கமும் பயிற்சியின்போது அளிக்கப்பட்டது.
பயிற்சியில் காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சுமாா் 40 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனா்.