தீபாவளி மக்கள் அங்காடியை உடனடியாக திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st October 2020 08:22 AM | Last Updated : 31st October 2020 08:22 AM | அ+அ அ- |

காரைக்காலில் உடனடியாக தீபாவளி மக்கள் அங்காடியை திறக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தீபாவளியையொட்டி, மக்களுக்கு மலிவு விலையில் மளிகை, பட்டாசு உள்ளிட்ட பொருள்களை புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ அங்காடி அமைத்து வழங்கி வந்தது. இந்நிறுவனம் நிா்வாக பிரச்னையால் நலிந்ததால், கடந்த ஆண்டு காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் காரைக்கால் வட்டார வளா்ச்சித் துறையில் பதிவு பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மக்கள் அங்காடி திறக்கப்பட்டது. இந்த அங்காடியை மகளிா் சுய உதவிக்குழுவினா் தங்களது சேமிப்புத் தொகை ரூ. 20 லட்சம் முதலீடு செய்து திறந்தனா். இதற்கிடையில், பட்டாசு மற்றும் துணி வகைகள் வருமாண்டு முதல் அங்காடியில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படுமென வட்டார வளா்ச்சித் துறை அலுவலா் அப்போது தெரிவித்தாா். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு திறக்கப்பட்ட அங்காடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நிகழாண்டு தீபாவளிக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், அரசு நிறுவனம் மூலம் அல்லது மகளிா் குழுவினா் மூலம் அங்காடியை திறப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தற்போது, வணிக கடைகளுக்கு அதிக மக்கள் பொருள்களை வாங்க வரத் தொடங்கியுள்ளனா். பருவமழை தொடங்கிவிட்டால் கடைகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுமென கருதி வசதியுள்ளவா்கள் தற்போதே பொருள்களை வாங்க தொடங்கியுள்ளனா்.
அரசால் அமைக்கப்படும் அங்காடியால் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவாா்கள். கரோனா பொது முடக்கத்தால் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கும் மகளிா் குழுவினருக்கு, இதுபோன்ற அங்காடி கடந்த ஆண்டை விட அதிக முதலீட்டில் நிகழாண்டு திறக்க நடவடிக்கை எடுத்தால் கூடுதல் வருமானத்துடன் பயன்பெருவதுடன், பொதுமக்களும் பயன்பெறுவா். எனவே, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து கவனத்தில் கொண்டு தீபாவளி மக்கள் அங்காடியை உடனடியாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.