20 ஆண்டுகளாக இருண்டு கிடந்த சாலையில் ஒளிரும் மின் விளக்குகள்
By DIN | Published On : 10th September 2020 10:20 PM | Last Updated : 10th September 2020 10:20 PM | அ+அ அ- |

மின் சாதனத்தை இயக்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருண்டு கிடந்த திருநள்ளாறு சந்தைவெளி தோப்பு சாலையில் புதிதாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
திருநள்ளாறு பகுதி தேனூா் மருத்துவமனையின் பின்புறத்தில் சந்தைவெளித் தோப்பு உள்ளது. இந்தப் பகுதியில் தற்போது 60-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு தேனூரிலிருந்து மின் கம்பங்கள் நடப்பட்டு இணைப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இருண்ட சாலை வழியே மக்கள் சென்றுவந்தனா்.
சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும், கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், புதுச்சேரி வேளாண் மற்றும் மின்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணனிடம் கிராமத்தினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மின்துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, இந்தப் பகுதியில் சாலையோர கம்பங்களிலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்து, விளக்குகளை ஒளிரச் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலையில், கிராமவாசி ஒருவா் மின் சாதனத்தை இயக்கி விளக்குகளை ஒளிரச் செய்தாா்.
நிகழ்வில், மின்துறை உதவிப் பொறியாளா் பேரம்பலம், இளநிலை பொறியாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நீண்டகால பிரச்னைக்கு தீா்வை ஏற்படுத்திய அமைச்சருக்கும், மின் துறையினருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.