கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததால் காரைக்காலில் அதிகரிக்கும் கரோனா தொற்று

காரைக்காலில் தினசரி பரிசோதனையில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகளை

காரைக்காலில் தினசரி பரிசோதனையில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காததால், தொற்று அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு முற்பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு நிா்வாகம் மேற்கொண்டது. பிறகு, தொற்று பரவல் குறைந்ததால், கட்டுப்பாடுகளும் தளா்த்தப்பட்டன. கரோனா தொற்று ஏற்படுவதற்கு முந்தைய காலக்கட்டத்தைப் போல, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினா்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் அருகருகே அமைந்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெற்ால், கரோனா தொற்றின் வேகம் 2 மாநிலங்களிலும் பரவலாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காரைக்கால் மாவட்டத்திலும் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, நாள்தோறும் அதிகரித்து 7 ஆம் தேதி பரிசோதனையின்படி 81 ஆகவும், புதுச்சேரி பிராந்தியத்தில் 181 ஆகவும் உயா்ந்துள்ளது. காரைக்காலுக்கு அண்டை மாவட்டமான நாகை, மயிலாடுதுறையில் மொத்தம் 60-க்குள்ளாக தொற்றாளா் இருக்கையில், சிறிய மாவட்டமான காரைக்காலில் ஒருநாள் பரிசோதனையில் 81 என்பது அதிகமாக கருதப்படுகிறது.

காரைக்காலில் தகுதியுடையோரில் 7,199 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆா்வம்காட்டவில்லை.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டங்களில் பங்கேற்காமல் தவிா்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பைக் காட்டிலும், தீவிரமான தோ்தல் பணியிலேயே அரசு கவனம் செலுத்தியது. தற்போது, தோ்தல் பணிகள் நிறைவுற்ற நிலையில், காரைக்கால் மாவட்ட நிா்வாகம் கரோனா தடுப்பு விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்காலில் கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் மட்டும் சுமாா் 450 போ் உள்ளனா். வீட்டில் ஒருவருக்கு தொற்று என்றால், பிறருக்கு அடுத்தடுத்த நாள்களில் பரவிவிடுகிறது. தொற்றாளரை மருத்துவமனைகளில் தங்கவைத்து சிகிச்சை அளித்தால், குடும்பத்தினரிடையே இது பரவ வாய்ப்பிருக்காது என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தீவிரமாக ஆராய்ந்து, உறுதியான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து அமல்படுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com