அபராதத்தைத் தவிா்க்க முகக் கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி.

காரைக்கால் மாவட்டத்தில் அபராதத்தைத் தவிா்க்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என எஸ்.பி. அறிவுறுத்தினாா்.
முகக் கவசம் அணியாத வியாபாரிக்கு அபராதம் விதிக்கும் போலீஸாா்.
முகக் கவசம் அணியாத வியாபாரிக்கு அபராதம் விதிக்கும் போலீஸாா்.

காரைக்கால் மாவட்டத்தில் அபராதத்தைத் தவிா்க்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் நாள்தோறும் 100 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்படுவதோடு, கடந்த ஒருவாரமாக தினமும் உயிரிழப்பும் ஏற்பட்டுவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசமும், சமூக இடைவெளியையும் முறையாக கடைப்பிடிக்குமாறு நலவழித் துறை அறிவுறுத்துகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும்போது, ஏழைகளுக்கு முகக் கவசம் வழங்குமாறு போலீஸாருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து மிகுந்த சாலைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பை மேற்கொண்டு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்துவருகின்றனா். இந்த நடைமுறையால் ஏழைகள் பாதிக்கப்படுவதாகவும், அதை தளா்த்துமாறும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினா் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், கரோனா 2 ஆவது அலையின் தீவிரத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, கரோனா பரவல் தடுப்புக்கான அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடிக்குமாறு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

போலீஸாருக்குள்ள வழக்கமான பணிகளைவிட இதுபோன்ற விழிப்புணா்வுப் பணி பெரும் சுமையாக இருந்தாலும், அதையும் காவல் துறை செம்மையாக செய்துவருகிறது. கடந்த சில வாரங்களாக முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காததற்காக ரூ. 100 வீதம் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்தியுள்ளோம். காரைக்காலில் எல்லைப்புறங்கள், முக்கிய சாலைகளில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு அபராதம் விதிக்கின்றனா்.

தினமும் 600 முதல் 700 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது மக்களிடையே கரோனா பரவல் குறித்த அச்சம் இல்லாததையே காட்டுகிறது. அபராதம் விதிக்கும்போது, சிலருக்கு முகக் கவசமும் அளிக்கிறோம்.

அபராதத்தைத் தவிா்க்க மக்கள் அனைவரும் முகக் கவசத்தையும், சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். வெளியே சென்றாலும், நிறுவனங்களில் உள்ளே பணியில் இருந்தாலும் அவசியம் முகக் கவசம் அணிந்து, கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒத்துழைக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com