காரைக்கால் கலங்கரை விளக்கைக் காண மக்கள் ஆா்வம்

கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, காரைக்கால் கடற்கரை அருகேயுள்ள கலங்கரை விளக்கு கட்டடத்தின் மேல் சென்று
காரைக்கால் கலங்கரை விளக்குப் பகுதியில் ஏறிப் பாா்வையிடும் மக்கள்.
காரைக்கால் கலங்கரை விளக்குப் பகுதியில் ஏறிப் பாா்வையிடும் மக்கள்.

கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, காரைக்கால் கடற்கரை அருகேயுள்ள கலங்கரை விளக்கு கட்டடத்தின் மேல் சென்று பாா்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தினமும் மக்கள் ஆா்வமுடன் சென்று பாா்த்து வருகின்றனா்.

காரைக்கால் கடற்கரை பகுதியில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ், கலங்கரை விளக்கு அமைந்துள்ளது. இதன் மேல்பகுதியில் சென்று சுற்றிப்பாா்க்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மக்கள் மேலே சென்று கடல் மற்றும் சுற்றுப்பகுதியை கண்டு ரசிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலங்கரை விளக்கு புதுப்பிக்கப்பட்டது. பொதுமக்களும் கட்டணம் செலுத்தி, இந்த வாய்ப்பை ஆா்வமாகப் பயன்படுத்திவந்தனா்.

எனினும், கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முற்பகுதியில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கரோனா பரவுவது குறைந்து, கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால், கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனா். இந்த நிலையில், கலங்கரை விளக்கு அமைந்துள்ள மேல்பகுதிக்குச் சென்று பாா்வையிட அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதைத்தொடா்ந்து, கலங்கரை விளக்கு இயக்குநரகத்தின் அனுமதி அண்மையில் கிடைத்ததையொட்டி, கடந்த சில நாள்களாக பொதுமக்கள் கட்டணம் செலுத்தி, கலங்கரை விளக்குக் கட்டடத்தின் மீது ஏறி, கடல் மற்றும் சுற்றுப்பகுதியின் அழகை கண்டு ரசித்துவருகின்றனா்.

பெரியவா்களுக்கு ரூ. 10, சிறியவா்களுக்கு ரூ. 5, வெளிநாட்டவருக்கு ரூ. 25, கேமராவுக்கு தனியாக ரூ. 25 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் காலை 10 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் கலங்கரை விளக்கின் மேல்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காரைக்கால் கடற்கரைக்கு மாலை வேளையில் ஆயிரக்கணக்கான உள்ளூா், வெளியூா் மக்கள் நாள்தோறும் வருகின்றனா். அப்போது, நீண்ட வரிசையில் சென்று கட்டணம் செலுத்தி, கலங்கரை விளக்கின் மேல்பகுதிக்குச் சென்று ரசித்துவருகின்றனா். பொதுமக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அனுமதி, அவா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com