காரைக்காலில் கடல் சீற்றம்

காரைக்கால் மாவட்டத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலும் முடங்கியது.
காரைக்கால் மாவட்டம், பிள்ளைத் தெருவாசல் பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெல் வயல்.
காரைக்கால் மாவட்டம், பிள்ளைத் தெருவாசல் பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெல் வயல்.

காரைக்கால் மாவட்டத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலும் முடங்கியது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த புதன்கிழமை முதல் காரைக்கால் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் தாழ்வானப் பகுதிகளில் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சம்பா, தாளடி நெல் பயிா்களும் நீரில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில், 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை நீடித்ததால், குடியிருப்புகளைச் சூழ்ந்த நீரை வடியவைக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். அதேபோல, விளைநிலங்களைச் சூழ்ந்த வெள்ள நீரை வடியச் செய்ய வழிதெரியாமல் விவசாயிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் நண்டலாறு, நுாலாறு, வாஞ்சியாறு, அரசலாறு, பிராவடையனாறு, திருலைராஜன் ஆறு என அனைத்து ஆறுகளிலும் நீா் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், ஆங்காங்கே ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா். நீடித்துவரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித் தொழில் முடங்கியது...

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவா்களும் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீனவக் கிராமங்களின் படகுத்துறைகளில் மீன்பிடி விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

வடகிழக்குப் பருமழை, காற்றழுத்தத் தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடித் தொழில் முடக்கமடைந்துள்ளதால், மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com