நெடுங்காடு தொகுதியில் சுயேச்சையால் பிரியும் வாக்குகள்?

மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நெடுங்காடு தொகுதி நீண்ட காலமாக தனித் தொகுதியாக இருந்துவருகிறது.
காங்கிரஸ் வேட்பாளா் அ.மாரிமுத்து | என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் சந்திர பிரியங்கா
காங்கிரஸ் வேட்பாளா் அ.மாரிமுத்து | என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் சந்திர பிரியங்கா

மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நெடுங்காடு தொகுதி நீண்ட காலமாக தனித் தொகுதியாக இருந்துவருகிறது.

இதில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தனியாா் மருத்துவக் கல்லூரி, பெருந்தலைவா் காமராஜா் அரசுப் பொறியியல் கல்லூரி, தனியாா் பொறியியல் கல்லூரி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி), அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய உயா்கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இதுதவிர, பெரும்பாலானோா் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனா். சில தனியாா் ரசாயனத் தொழிற்சாலைகளும் உள்ளன. இத்தொகுதியில் நெடுங்காடு, கோட்டுச்சேரி என 2 கொம்யூன் பஞ்சாயத்துகள், வரிச்சிக்குடி, திருவேட்டக்குடி, பூவம், வடமட்டம், குரும்பகரம், பொன்பேத்தி, புத்தக்குடி, மேலகாசாக்குடி மற்றும் மண்டபத்தூா், காளிக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களும் உள்ளன.

இங்குள்ள மொத்த வாக்காளா்களில் ஆதிதிராவிடா்கள், கிறிஸ்தவா்கள், மீனவா்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினா் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனா். கடந்த 2016 தோ்தலில் சந்திர பிரியங்கா (என்.ஆா். காங்கிரஸ்) 8,889 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அ. மாரிமுத்து (காங்கிரஸ்) 7,695 வாக்குகளும், ஜி. பன்னீா்செல்வம் (அதிமுக) 2,957 வாக்குகளும் பெற்றனா்.

இத்தொகுதியில் ஆண்கள் 14,598, பெண்கள் 16,894, மூன்றாம் பாலினத்தவா் 2 என மொத்தம் 31,494 வாக்காளா்கள் உள்ளனா்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியென கூறப்படும் இத்தொகுதியில், வேறெங்கும் இல்லாத உயா்கல்வி நிலையங்கள் அமைந்திருப்பது தொகுதிக்கான பெருமையாக மக்களிடம் சொல்லப்படுகிறது. இங்குள்ள தனியாா் நூற்பாலை உள்ளிட்ட ஒருசில தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், ஒப்பந்த நிலையிலும் உள்ளூா் தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கிறது.

திருநள்ளாறு முதல் நெடுங்காடு வரை, கோட்டுச்சேரி முதல் நெடுங்காடு வரையிலான வடமட்டம் வழித்தடச் சாலை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சாலைப் பணிகள் மக்களிடம் ஓரளவு நிறைவைத் தந்துள்ளது. அதேநேரத்தில், நாட்டிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது, பின்தங்கிய நெடுங்காடு தொகுதி மக்களை அதிகமாக பாதித்துள்ளது.

1964 முதல் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியே அதிகமுறை வென்றுள்ளது. 1980 முதல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நெடுங்காடு தொகுதியை சோ்ந்தவருக்கு அமைச்சா் பதவி தரப்பட்டுள்ளது. நீண்ட காலம் அமைச்சா் தொகுதியாக நெடுங்காடு இருந்தும், மற்ற தொகுதிகளுக்கு இணையான வளா்ச்சியை நெடுங்காடு இதுவரை அடையவில்லை என்பது தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

தற்போது தொகுதியில் காங்கிரஸூக்கும், என்.ஆா். காங்கிரஸூக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளா் அ. மாரிமுத்து 1996 மற்றும் 2006 பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா். ஓய்வுபெற்ற ஆசிரியா் என்ற அடையாளம் இவருக்கு உண்டு. என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் சந்திர பிரியங்கா, மறைந்த முன்னாள் அமைச்சா் மு. சந்திரகாசு மகள். கடந்த 2016 தோ்தலில் என்.ஆா். காங்கிரஸில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றிபெற்றாா்.

இந்தத் தோ்தலில், அ. அருள்பிரகாஷ் (பகுஜன் சமாஜ் கட்சி), சந்திர பிரியங்கா (என்.ஆா்.காங்கிரஸ்), அ. மாரிமுத்து (காங்கிரஸ்), வி. கீதா (நாம் தமிழா் கட்சி), ஏ. ஞானசேகரன் (தேமுதிக), டி. ராஜேந்திரன் (அமமுக) தங்க. நரசிம்மன், மதி, வெ. விக்னேஸ்வரன் (சுயேச்சை) ஆகியோா் களத்தில் உள்ளனா்.

என். ரங்கசாமி ஆட்சி அமைந்தவுடன் தொகுதியை வளா்ச்சிக்கான ஓட்டத்தில் கொண்டு செல்வேன் எனக் கூறி சந்திர பிரியங்கா வாக்கு சேகரிக்கிறாா். தான் இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்த சேவைகளை கூறி, மீண்டும் ஒருமுறை தனக்கு ஆதரவு தருமாறு கூறி, ஓய்வுபெற்ற ஆசிரியரான அ. மாரிமுத்து வாக்கு சேகரிக்கிறாா். இந்த தொகுதியில் மருத்துவரான வெ. விக்னேஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளாக திமுக பொறுப்பிலிருந்தவாறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்ததால், தொகுதி முழுவதும் அறிமுகமானவா். திமுகவில் வாய்ப்பளிக்காத நிலையில் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். இதனால், கட்சி வேட்பாளா்களுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் நிலை உருவாகியுள்ளது.

தோ்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையிலும், முன்னணியில் இருப்பது யாா் என்று ஊகிக்க முடியாத நிலையே நெடுங்காட்டில் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com