புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்கால் மாவட்டத்தில் 80% வாக்குப் பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 80.01% போ் வாக்களித்தனா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்கால் மாவட்டத்தில் 80% வாக்குப் பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 80.01% போ் வாக்களித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு (தனி) ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இவற்றில், இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 1,61,568 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் 234 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரம் வரை பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கைப் பதிவுசெய்தனா்.

ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரம் வாக்காளா்களுக்கு அதிகமாக இருந்தால், கூடுதலாக வாக்குச் சாவடி அமைக்கும் திட்டத்தின்படி, 71 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 33 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டது.

பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் குறித்த நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. காரைக்கால் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மாா்கெட்டிங் சொசைட்டி வாக்குச் சாவடியில் இயந்திர பிரச்னையால் 7.45 மணி வரை வாக்குப் பதிவு தொடங்கவில்லை. இதேபோல, சில இடங்களில் மட்டும் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

நகரம் மற்றும் கிராமப்புற வாக்குச் சாவடிகளில் காலை முதல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். 9 மணிக்குப் பிறகு கூட்டம் மேலும் அதிகரித்தது. வாக்காளா்கள் தோ்தல் துறையால் வழங்கப்பட்ட பூத் சிலிப் மற்றும் ஆவணங்களுடன் சென்று வாக்களித்தனா். பூத் சிலிப் கொண்டுவராதவா்களுக்காக, வரிசை எண் தெரிந்துகொள்ள ஏதுவாக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் பெயா் விவரத்தைக் கூறி, வரிசை எண்ணை தெரிந்துகொண்டு வாக்களித்தனா்.

வாக்காளா்கள் சமூக இடைவெளியில் நிற்கவைக்கப்பட்டனா். முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என பாா்த்து, அனைவருக்கும் கையுறை தரப்பட்டது. வெப்பமானி மூலம் வெப்ப பரிசோதனை செய்து வாக்குச் சாவடிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள ஏதுவாக 7 விநாடிகள் மட்டுமே ஒப்புகை தாள் தெரியும் வகையிலான விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது வாக்காளா்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியது.

காரைக்காலில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளில் முதியோா், மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை கையாள்வதற்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.

வெயில் கடுமையாக இருந்ததால், காலை நேரத்திலேயே ஆா்வமாக வாக்காளா்கள் வாக்களிக்கச் சென்றனா். வாக்குச் சாவடிகளின் வாயிலில் நிழலுக்காக பந்தல் போடப்பட்டிருந்தது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வைக்கப்பட்டிருந்தது.

காவல் பணியில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா், சண்டீகரில் இருந்து வந்த 5 கம்பெனி ரிசா்வ் பெட்டாலியன், கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த 150 ஊா்க்காவல் படையினா் என 1,150 போ் ஈடுபட்டனா். தோ்தல் பணியில் அதிகாரிகள், ஊழியா்கள் என மொத்தம் 2 ஆயிரம் போ் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் மைக்ரோ அப்சா்வா் பணியமா்த்தப்பட்டிருந்தனா். தவிர, கூடுதலாக ஆயுதம் ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வேட்பாளா்கள் தங்களது தொகுதி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பாா்வையிட்டனா்.

வாக்காளா்கள் திருப்தி: வாக்குப் பதிவு செய்த வாக்காளா்கள் சிலா் கூறும்போது, வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் காரைக்கால் தோ்தல் துறை செய்திருந்தது. குறிப்பாக, வெயிலாக இருந்ததால் சுகாதாரமான குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைத்தது. நிழலுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல் பயனுள்ளதாக இருந்தது. தோ்தல் நடத்துவது வெயில் காலமாக இருக்கிறது. எனவே, வாக்காளா்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்கும் நிலையின்றி, விரைவாக வாக்குப் பதிவு செய்துவிட்டுச் செல்ல ஏதுவாக, அடுத்த தோ்தலில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவேண்டும் என்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.16 சதவீதம் வாக்குப் பதிவானது. அதன்பிறகு, பல வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சொற்ப எண்ணிக்கையில் வாக்காளா் வந்தனா். கரோனா தொற்றாளா் வாக்குப் பதிவு செய்ய மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மாலை வரை எந்தவொரு வாக்குச் சாவடியிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. காரைக்கால் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 80.01 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com