கரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை மதுக்கடைகளுக்கு சீல் வைக்க வலியுறுத்தல்

புதுவையில் கரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை அனைத்து மதுக்கடைகளையும் கலால் துறை சீல் வைக்கவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

புதுவையில் கரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை அனைத்து மதுக்கடைகளையும் கலால் துறை சீல் வைக்கவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க. தேவமணி, புதுச்சேரி கலால் துறை செயலா் மற்றும் ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்:

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது, பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டது. எனினும், பல மதுக்கடைகள் மறைமுகமாக மது விற்பனை செய்தன. அரசின் விதியை பலரும் பொருட்படுத்தாமல் நடந்துகொண்டனா்.

இது விதிமீறிய செயல் என பாமக புகாா் அளித்த நிலையில், மதுக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. என்றாலும், மது விற்பனை நீடித்ததால், பாமக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. பிறகு, பொதுமுடக்கத் தளா்வுகளின்படி கடைகள் திறக்கப்பட்டாலும், வழக்கின் மூலம் பல மதுக்கடைகள் திறக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், கரோனா 2 ஆவது அலை தீவிரமாகியுள்ள சூழலில், வரும் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூடுமாறு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதுவரை கடைகள் திறக்க வாய்ப்பில்லை.

எனவே, கலால்துறை உடனடியாக அனைத்து மதுக்கடைகளிலும் உள்ள இருப்பை கணக்கெடுப்பதோடு, கடைகள் அனைத்தையும் சீல் வைக்கவேண்டும். மறு உத்தரவு வரும் வரை அனைத்து மதுக்கடைகளும் கலால் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், மதுக்கடை உரிமம் பெற்றோா், மறைமுகமாக மது விற்பனை செய்வா்.

இது பல சட்டவிரோத செயல்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே, கடைகளை சீல் வைப்பதோடு, கடைகளில் கண்காணிப்புக் கேமரா இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

புதுவையில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து, உயிரிழப்புகள் தொடரும் சூழலில், தொற்று பரவல் கட்டுக்குள் வரும் வரை மதுக்கடைகளை திறக்கும் முடிவை எடுக்கக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com