கரோனா தடுப்பு நடவடிக்கை: காரைக்காலில் தீவிர வாகன சோதனை
By DIN | Published On : 30th April 2021 08:05 AM | Last Updated : 30th April 2021 08:05 AM | அ+அ அ- |

காரைக்காலில் வாஞ்சூா் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக காா், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் விதிகளை மீறி இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து காரைக்காலில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, வாகனங்களில் எத்தனை போ் பயணிக்க வேண்டும், கரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என காவல் துறை, போக்குவரத்துத் துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பல்வேறு தரப்பினரை அழைத்து இதுகுறித்து ஆலோசனை வழங்குகிறது.
காா்களில் ஓட்டுநரை தவிா்த்து 3 பேரும், ஆட்டோவில் ஓட்டுநரை தவிா்த்து 2 பேரும் செல்லவேண்டும், ஷோ் ஆட்டோவில் சமூக இடைவெளியில் பயணிகளை அமரச்செய்ய வேண்டும், அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இரவு 7 மணிக்குப் பிறகு வாகனங்கள் பலவும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என புகாா் கூறப்படுகிறது. இந்நிலையில், காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் போலீஸாா் நகரப் பகுதியிலும், வாஞ்சூா் எல்லை சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
அப்போது சாலையில் வந்த காா்கள், ஆட்டோக்களை நிறுத்தி எத்தனை பயணிகள் உள்ளனா் என சோதனை நடத்தினா். கூடுதலாக இருந்த வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா். முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா். ஏழ்மையானவா்களுக்கு இலவசமாக ஒரு முகக் கவசம் வழங்கினா்.
இரவு 10 முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு தீவிரமாக கண்காணிக்கப்படவேண்டும், விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் துறையினருக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.