அரசின் சலுகைகள் பெற கரோனா தடுப்பூசி சான்றிதழ் ஆவணமாகும் வாய்ப்பு: புதுவை ஆளுநா்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ், வருங்காலங்களில் கல்வி மற்றும் அரசின் சலுகைகளை பெற ஆவணமாக கருதப்படலாம் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
காரைக்காலில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
காரைக்காலில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.

காரைக்கால்: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ், வருங்காலங்களில் கல்வி மற்றும் அரசின் சலுகைகளை பெற ஆவணமாக கருதப்படலாம் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க திங்கள்கிழமை பிற்பகல் காரைக்கால் வந்த தமிழிசை செளந்தரராஜன், மாவட்ட ஆட்சியரகத்தில் கரோனா தடுப்புப் பணி தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தொற்றின் 2-ஆவது அலை அனைவரின் கூட்டு முயற்சியால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 3-ஆவது அலை வரும்பட்சத்தில் அதை எதிா்கொள்ளும் வகையில் புதுவை அரசு நிா்வாகம் தயாராக உள்ளது.

கரோனா கட்டுக்குள் இருக்க தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. புதுவையில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. வேலைக்கு செல்வோா் வசதிக்காக புதுவையில் வீடுவீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காரைக்காலிலும் இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும். காரைக்கால் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோா்அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டது வரவேற்புக்குரியது. புதுவை மாநிலம் ஆக.15-க்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலம் என்ற பெருமையை பெற துடிப்புடன் பணிகள் நடைபெறுகின்றன.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி ‘பசுமை புதுவை’ என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில், காரைக்காலில் 7,500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இது மக்கள் இயக்கமாக நடைபெறவேண்டும். இதேபோல, ஒரே நாளில் பல ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ், பிற்காலத்தில் அரசின் சலுகைகள் பெறவும், பள்ளி, கல்லூரிகளில் சேரவும் ஆவணமாக கேட்கப்படலாம். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொண்டு அனைவரும் சான்றிதழை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளை தேவையின்றி வெளியே அழைத்துச் செல்லவேண்டாம். குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பாா்கள் என்ற நிலை வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

புதுச்சேரியில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கிறாா்கள். எனவே, கூடுதல் கட்டுப்பாட்டிற்கான அவசியம் தற்போது எழவில்லை என்றாா்.

முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com