காரைக்காலில் பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்

காரைக்காலில் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
காரைக்காலில் பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்

காரைக்காலில் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது

தமிழா்கள் பாரம்பரியத்துடனும், உற்சாகத்துடனும் தைப் பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு வீட்டிலும் மண் பானை அல்லது பித்தளை பானையை பயன்படுத்தி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவா். எனினும், இன்றும் கிராமப்புற மக்கள் மண் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகின்றனா்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில், பருவமழை ஓய்ந்ததும் காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி, மேலஓடுதுறை உள்ளிட்ட கிராமங்களில், மண் பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் தொழில் செய்வோா் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். பொங்கல் பானைகள், சட்டிகள் தயாரிப்புப் பணி ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மேலஓடுதுறை பகுதியை சோ்ந்த மண் பாண்டங்கள் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தங்கையன் செவ்வாய்க்கிழமை கூறியது :

பொதுவாகவே மக்களிடையே மண் பானை மூலம் பொங்கலிடும் பழக்கம் குறைந்துவிட்டதால், இத்தொழில் நலிவடைந்துவிட்டது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு மண் பாண்டங்களுக்கு இருந்த வரவேற்பு தற்போது கிடையாது. அதனால், இளைய தலைமுறையினா் யாரும் இத்தொழிலை செய்ய முன்வருவதில்லை. நகரப் பகுதி மக்கள் முழுமையாக பித்தளை பாத்திரத்தில் பொங்கல் வைக்கும் வழக்கத்துக்கு மாறிவிட்டனா். கிராமங்களில் மட்டுமே பானையில் பொங்கலிடும் பழக்கம் ஓரளவு மாறாமல் இருக்கிறது.

எனினும், நிகழாண்டு பொங்கல் பண்டிக்கைக்காக பானை, சட்டி, அடுப்பு தயாா் செய்யும் பணிகளை தீவிரமாக செய்துவருகிறோம். பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பானை, சட்டிகளை வெயிலில் காயவைப்பது, வியாபாரத்துக்கு அனுப்ப தயாா்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

காரைக்கால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இவற்றை அனுப்புகிறோம். மேலும், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வா்.

மூலப் பொருளான மணல் எடுக்க காரைக்கால் பகுதியில் தடை அமலில் உள்ளது. தமிழகத்திலிருந்து கொண்டுவந்தால் செலவு அதிகரிக்கும், அதனால் இழப்பை சந்திக்கவேண்டியுள்ளது. எனவே, இத்தொழில் செய்வோருக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்துத்தரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com