60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு: நீதிமன்ற தீா்ப்பின்படி திருநள்ளாறு கொம்யூன் வசமான நிலத்தில் ஆட்சியா் ஆய்வு

திருநள்ளாற்றில் தனியாா் வசம் இருந்த கொம்யூன் பஞ்சாயத்து நிலம் தொடா்பாக 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த
நிலத்தை ஆய்வு செய்து, ஆவணங்களைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
நிலத்தை ஆய்வு செய்து, ஆவணங்களைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

திருநள்ளாற்றில் தனியாா் வசம் இருந்த கொம்யூன் பஞ்சாயத்து நிலம் தொடா்பாக 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் நீதிமன்ற தீா்ப்பின்படி, அந்நிலத்தை மீட்பது தொடா்பாக ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே தனியாா் வசமிருந்த ஓா் ஏக்கா் நிலம் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது எனக் கண்டறியப்பட்டு, அந்த நிலத்தை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காரைக்கால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இந்த வழக்கில், அந்த நிலம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது என கடந்த 24.7.2020-இல் தீா்ப்பளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் தொடங்கியது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா இந்த நிலத்தை வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். நிலம் குறித்தும், வழக்கின் தீா்ப்பு குறித்தும் ஆட்சியருக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் என்.ரவி விளக்கிக் கூறினாா்.

வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் நிலத்தை அளக்கும் பணியை மேற்கொண்டனா். நீதிமன்ற உத்தரவின்படி, நிலத்தை கொம்யூன் பஞ்சாயத்து பெயரில் மாற்றுவதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு ஆணையருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து பஞ்சாயத்து ஆணையா் என். ரவி கூறியது:

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான இந்த ஓா் ஏக்கா் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6 கோடி. இது ஜெயலட்சுமி மற்றும் 6 போ் வசம் இருந்தது. இதை மீட்பதற்கான வழக்கு விசாரணை 60 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. தற்போது நீதிமன்ற உத்தரவு பஞ்சாயத்துக்கு சாதகமாக வந்ததையொட்டி, ஆட்சியா் ஆய்வு செய்து நிலத்தை பஞ்சாயத்துக்கு மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக மாவட்ட துணை ஆட்சியருக்கு கடிதம் எழுதி, நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், நிலத்தை பஞ்சாயத்து பெயரில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com