விவசாயிகளுக்கு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 04th January 2021 08:19 AM | Last Updated : 04th January 2021 08:19 AM | அ+அ அ- |

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளா்களுக்கு தரமான நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வா் சாமராவ் ஜஹாகிா்தா் தலைமை வகித்துப் பேசுகையில், விதை உற்பத்தியில் வேளாண் கல்லூரி உரிய பங்காற்றிவருகிறது. இதை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகள் லாபம் ஈட்டுவதற்கான பல வழிகளில் விதை உற்பத்தியும் ஒன்று. எனவே, விவசாயிகள் தரமான விதை உற்பத்தியாளா்களாக மாறவேண்டும். அதற்கான ஆதரவை வேளாண் கல்லூரி வழங்கும் என்றாா்.
காரைக்கால் வேளாண் துறை கூடுதல் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், வேளாண் கல்லூரியில் பதிவுசெய்து, விதை உற்பத்தி செய்துதரும் விவசாயிகளுக்கு அதற்கான ஊக்கத்தொகை கடந்த 2 ஆண்டுகளாக தரப்படுகிறது. இதனால், விவசாயிகள் பலா் பயனடைகின்றனா். என்றாலும், காரைக்கால் மாவட்டத் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இந்தச் செயல்பாடுகள் மேலோங்க வேண்டும் என்றாா்.
பயிற்சியின் நோக்கம் குறித்து விதை திட்ட தலைவா் டி. ராமநாதன் பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஓா் ஏக்கருக்கு தேவையான விதைநெல் 50 சதவீத மானியத்தில் தரப்படுகிறது. வரும் பருவத்தில் உளுந்து விதை உற்பத்திக்கு, 25 ஏக்கருக்குத் தேவையான விதைகள் 60 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது என்றாா்.
பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் பி. பாண்டியன் வரவேற்றாா். விதை கிராம திட்டத் தலைவா் டி. ராமநாதன் நன்றி கூறினாா்.