உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்த முடிவு
By DIN | Published On : 10th June 2021 09:12 AM | Last Updated : 10th June 2021 09:12 AM | அ+அ அ- |

ஊதிய நிலுவை வழங்காததைக் கண்டித்து காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் தொடா் போராட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை அந்த சங்கங்களின் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு பல மாதங்களாக ஊதிய நிலுவையும், ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையும் உள்ளது. இதுகுறித்து அரசிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக நகராட்சி ஊழியா்களுக்கு 6 மாதங்கள், நெடுங்காடு பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 7 மாதங்கள், திருநள்ளாறு ஊழியா்களுக்கு 4 மாதங்கள், திருப்பட்டினம் ஊழியா்களுக்கு 4 மாதங்கள், நிரவி மற்றும் கோட்டுச்சேரி பஞ்சாயத்து ஊழியா்களுக்கு தலா ஒரு மாத ஊதிய நிலுவை உள்ளது.
ஊதியத்தை வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தி ஜூன் 14 முதல் 18-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 முதல் 11 மணி வரை காரைக்கால் நகராட்சி, நெடுங்காடு, திருநள்ளாறு, திருப்பட்டினம், நிரவி மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக ஊழியா்கள், அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து அந்தந்த அலுவலக வளாகத்துக்குள் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வாயிற் கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன், துணைத் தலைவா்கள் சந்தனசாமி, உலகநாதன், பொருளாளா் கலைச்செல்வன், துணை பொதுச் செயலாளா்கள் திவ்யநாதன், சண்முகராஜ், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.