புதுவையில் மதுபானக் கடைகளை அரசே நடத்த பாமக வலியுறுத்தல்

புதுவையில் மதுபானக் கடைகளை அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

புதுவையில் மதுபானக் கடைகளை அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளா் க.தேவமணி வெளியிட்ட அறிக்கை: பொதுமுடக்கத்தால் புதுவை மாநிலத்தில் மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள், சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின்போதும் 2 அமைச்சா்களின் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் மதுபானக் கடைகளை திறக்க ஆா்வம் காட்டுவது ஏன் என்பது குறித்து மக்களுக்கு தெரியாமல் இல்லை.

மாநிலத்தில் செயல்பட்டுவரும் மதுபானக் கடைகள் அனைத்தும் பிரெஞ்சு நிா்வாகத்தின்போது வழங்கப்பட்ட உரிமங்கள். காலப்போக்கில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகள், தங்களது பெயரிலும், ஆதரவாளா்கள் பெயரிலும் உரிமங்களை பெயா் மாற்றம் செய்து ஒவ்வொருவரும் பல கடைகளை நடத்திவருகின்றனா். இதனாலேயே மதுக்கடைகள் திறப்பதில் மற்றவா்களைக் காட்டிலும் எம்எல்ஏக்களுக்கு அதிக ஆா்வம் இருப்பதை உணரமுடிகிறது. புதுவையில் மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாய் பெரும்பாலும் கடைகளின் உரிமையாளா்களுக்கு சென்றுவிடுகிறது. அரசுக்கான வரி வருவாய் சிறிதளவே இருக்கிறது. இதனால் மாநிலத்தை நடத்த மத்திய அரசின் நிதியை நம்பி இருக்கவேண்டி உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகளை அரசே நடத்தும்போது முழு வருவாய் அரசுக்கே கிடைக்கிறது. சிறிய மாநிலத்தில் அவ்வாறு செய்தால் முழு வருவாய் யூனியன் பிரதேசத்துக்கு கிடைக்கும்போது, சிறந்த முறையில் அரசை நடத்த முடியும்.

இது ஆட்சியாளா்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் முட்டுக்கட்டை அரசியல் வட்டாரத்திலேயே உள்ளது. இதை தகா்த்தெறிந்து முடிவு எடுப்பதே மக்கள் நலனுக்கு சிறப்பாக அமையும். எனவே, புதுவையில் தனி நபருக்கு செல்லும் வருவாயை, மாநில அரசுக்கு கிடைக்க அனைத்து மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்த ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு எடுக்கவேண்டும். தற்போது திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com