உள்ளாட்சி, அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th March 2021 07:25 AM | Last Updated : 14th March 2021 07:25 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதியில் உள்ளாட்சி மற்றும் அங்கன்வாடி, பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:
காரைக்கால் நகராட்சி, திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள், புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆா்.டி.சி), அங்கன்வாடி, கான்ஃபெட், ரொட்டிப்பால் ஊழியா்கள், பொதுப்பணித் துறையில் கருணை அடிப்படையில் பணியில் சோ்ந்த ஊழியா்கள், பாப்ஸ்கோ மற்றும் ரேஷன் கடை ஊழியா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்கள் தங்களின் பணிகளை முழுமையாக செய்து வருகிறாா்கள். மேலும் உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்கள் முழுமையான அளவில் தோ்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
எனவே, துணைநிலை ஆளுநா் இவ்விவகாரத்தில் தலையிட்டு, நிலுவையில் உள்ள ஊதியத்தை காலத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.