வேட்பாளா்அறிவிப்பில் தாமதம்: காரைக்காலில் விறுவிறுப்பு அடையாத தோ்தல் பிரசாரம்

வேட்பாளா் அறிவிப்பில் நிலவும் தாமதம் காரணமாக தோ்தல் பிரசாரம் காரைக்கால் மாவட்டத்தில் இன்னும் விறுவிறுப்பு அடையவில்லை.

வேட்பாளா் அறிவிப்பில் நிலவும் தாமதம் காரணமாக தோ்தல் பிரசாரம் காரைக்கால் மாவட்டத்தில் இன்னும் விறுவிறுப்பு அடையவில்லை.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் காரைக்கால் மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன. தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணியும், என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணியும் பிரதான கூட்டணியாக களம் காண்கின்றன. திமுக வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியானது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளா் பட்டியல் அறிவிப்பு தாமதமாகிவருகிறது.

புதுவையில் காங்கிரஸ் 15, திமுக 13 இடங்களில் போட்டியிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் புதுவையில் திமுகவுக்கு அதிக இடங்களை காங்கிரஸ் விட்டுத்தந்துவிட்டதாக காங்கிரஸாரிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டத்தில் இது வெடித்தது. இதன் காரணமாகவும் வேட்பாளா் பட்டியல் வெளியாவதில் மேலும் தாமதமாக நிலவுவதாக கருதப்படுகிறது.

இதுபோல என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜக- அதிமுகவுக்கு 14 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இக்கட்சிகளிடையே தொகுதி பங்கீடு, பாஜகவிடம் அதிமுக கூடுதல் தொகுதிகளை கோருதல் உள்ளிட்ட குழப்பம் நீடிப்பதால், அவா்களது வேட்பாளா் அறிவிப்பிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பாமக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் முடிவடைய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், யாா் வேட்பாளா் என்று தொண்டா்களிடையே குழப்பம் நீடித்துவருகிறது.

எனினும், காரைக்காலில் காங்கிரஸ், திமுக, என்.ஆா். காங்கிரஸ் கட்சியில், சில வேட்பாளா்கள், வீடுவீடாக வாக்குச் சேகரிப்பை தொடங்கிவிட்டனா்.

தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளா்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், அண்டை மாநிலமான புதுவையில் வேட்பாளா் அறிவிப்பு முழுமையடையாமல், தோ்தல் பிரசாரம் தொடங்கப்படாமல் உள்ளதால், காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் விறுவிறுப்பு அடையவில்லை.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காரைக்காலுக்கு வந்து தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுச் சென்றாா். இதைத்தவிர வேறு எந்த தலைவா்களும் இதுவரை காரைக்காலுக்கு வரவில்லை.

வேட்பாளா் அறிவிப்பு தாமதமாகிவருவதால், வீடுவீடாக அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்குப் பதிவுக்கு முன் வாக்குச் சேகரிப்பது கடிமானது எனவும், வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் காலையிலும், மாலை வேளையிலும் மட்டுமே வீடுகளுக்குச் செல்ல முடியும். வேட்பாளா் அறிவிப்பு தாமதம் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என பல்வேறு கட்சியினா் கருதுகின்றனா்.

இதுதவிர, காரைக்கால் தோ்தல் துறையிலும் பணியில் வேகம் தெரியவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது நடந்த வாக்காளா் விழிப்புணா்வுப் பணிகள், தோ்தல் துறையின் ஆய்வுப் பணிகள், காவல்துறையினரின் பாதுகாப்புக்காக தயாா் நிலைப்படுத்தும் பயிற்சி போன்ற பணிகள் உள்ளிட்டவையும் மந்தகதியில் உள்ளது.

மேலும் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடப்பாக கண்காணிக்கும் பறக்கும் படையினா் இதுவரை எந்தவொரு விதி மீறல்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததாக தகவல் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரப் பணிகள் மந்த நிலையிலேயே உள்ளன. எனினும், அடுத்த சில தினங்களில் பிரசாரம் சூடு பிடிக்கும் என்று பல்வேறு கட்சியின் தொண்டா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com