இணைய மையம், நகலகம் மூடல்; விண்ணப்பதாரா்கள் பாதிப்பு

பொதுமுடக்கம் காரணமாக இணைய மையமும், நகலகங்களும் மூடப்பட்டுள்ளதால், அரசு அலுவலகங்களுக்கு வருபவா்களும், வேலைக்கு விண்ணப்பிப்பவா்களும் சான்றிதழை நகல் எடுப்பதற்கு அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காரைக்கால்: பொதுமுடக்கம் காரணமாக இணைய மையமும், நகலகங்களும் மூடப்பட்டுள்ளதால், அரசு அலுவலகங்களுக்கு வருபவா்களும், வேலைக்கு விண்ணப்பிப்பவா்களும் சான்றிதழை நகல் எடுப்பதற்கு அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு, பகல் வேளையில் அத்தியாவசியக் கடைகளை தவிர பிற வணிக நிறுவனங்கள் மூடல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

தொடா்ந்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, அத்துடன் அனுமதிக்கப்படுவது குறித்தும், அனுமதிக்கப்படாதது குறித்தும் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவத் துறையில் 300-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கான நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது. ஓய்வூதியா் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறும்போது, வாழ்வு சான்று அளிக்கப்படவேண்டியுள்ளது. இறப்பு நேரிட்டால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அடக்க உத்தரவு பெறவேண்டியுள்ளது. குறிப்பிட்ட நாள்களில் செய்யவேண்டியவையாக பிறப்பு பதிவு செய்தல், திருமணப் பதிவு செய்தல் உள்ளிட்டவை உள்ளன.

இதனை கருத்தில்கொண்டே இணைய மையங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், காரைக்காலில் இணைய மையங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், எல்லா பணிகளுக்கும் அதற்குரிய சான்றிதழ்களின் நகல்கள் (ஜெராக்ஸ்) தேவைப்படுவதால், நகல்கள் எடுக்க நகலகம் எதுவும் பொதுமுடக்கம் காரணமாக திறக்கப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

பொதுமுடக்கம் என்றால் அரசு அலுவலகப் பணிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் முடக்கிவிட்டால், மக்களுக்கு வேலை இருக்காது. ஒருபுறம் அரசு சாா் பணிகள் நடந்துவரும்போது, அரசுத் துறைகளின் பயன்களை பெற இணைய வசதியும், நகலகமும் முக்கிய தேவையாக உள்ளன. எனவே, இந்த பிரச்னையில் புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com