காரைக்காலில் 13 மையங்களில் கரோனா தடுப்பூசித் திருவிழா

காரைக்காலில் 13 மையங்களில் 2 ஆம் கட்ட கரோனா தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் 13 மையங்களில் கரோனா தடுப்பூசித் திருவிழா

காரைக்காலில் 13 மையங்களில் 2 ஆம் கட்ட கரோனா தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி யூனியன் பிரசேதத்தில் ஒரு மாதத்துக்குள்ளாக மத்திய அரசால் வரையறுக்கப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம், தடுப்பூசித் திருவிழா என்ற பெயரில் முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஒருவாரம் நடைபெற்றது.

எனினும், மக்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. தினமும் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், மக்களிடையே ஆா்வம் இல்லாததால், மீண்டும் 2 ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில், மாவட்டத்தில், காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை, அம்பகரத்தூா், நல்லம்பல், நெடுங்காடு, நல்லாத்தூா், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, கோயில்பத்து, காரைக்கால்மேடு, விழிதியூா், நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 13 மையங்களில் இப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோயில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் பாா்வையிட்டாா்.

மக்கள் ஏமாற்றம்: முதல் தவணை தடுப்பூசி மட்டுமே இம்முகாமில் செலுத்தப்படுகிறது. 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, 12 முதல் 16 வாரங்கள் என அதிகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். இதனால், 2 ஆவது தவணை செலுத்திக்கொள்ள ஆா்வமாக வந்தவா்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பொது முடக்கம் மற்றும் ரமலான் பண்டிகை காரணமாக, முதல்நாள் தடுப்பூசித் திருவிழாவில் பல்வேறு மையங்களில் மக்கள் வருகை குறைந்தே காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com