ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன்.
ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன்.

காரைக்கால் ஆட்சியருடன் எம்எல்ஏ.க்கள் சந்திப்பு: அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அதிகரிக்க வலியுறுத்தல்

காரைக்கால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால்: காரைக்கால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் காரைக்கால் வந்துசென்ால், எந்த பயனும் இல்லை, கரோனா தொற்றாளா்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் மாவட்டத்தில் அலட்சியம் நிலவுகிறது என காரைக்கால் தெற்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தாா்.

இதனடிப்படையில், பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோரை பேசவருமாறு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அழைப்புவிடுத்திருந்தாா். இதையொட்டி, பேரவை உறுப்பினா்கள் இருவா், திருநள்ளாறு சுயேச்சை எம்.எல்.ஏ. பி.ஆா். சிவா சாா்பில், அவரது ஆதரவாளா் சிவகுமாா் ஆகியோா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.எச். நாஜிம் கூறியது: காரைக்காலில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா்களைப் பயன்படுத்தி, பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கவேண்டும்.

கிராமப்புறங்களில் வசதியில்லாத வீடுகளில் வசிப்போா் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவா்களை மருத்துவமனைக்கோ அல்லது அண்ணா கல்லூரி கரோனா மையத்துக்கோ கொண்டு செல்லவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்துவதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

மேலும், மருத்துவமனையில் கரோனா தவிர பிற சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியபோது, இதுதொடா்பாக புதுச்சேரி நலவழித் துறை நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறினாா்.

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ள நிலையில், கூட்டம் கூடாத வகையில் மக்கள் ரேஷன் கடைகளில் எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்க வேண்டும். வரும்காலங்களில் அரிசி வழங்குவதில் ஆசிரியா்களை ஈடுபடுத்தாமல், ரேஷன் கடைகள் மூலமே வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதையும் ஆட்சியா் ஏற்றுக்கொண்டாா் என்றாா் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com