திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் கரோனா சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2021 08:54 AM | Last Updated : 19th May 2021 08:54 AM | அ+அ அ- |

திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் கரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நலவழித் துறை இயக்குநரை வலியுறுத்தியுள்ளதாக பி.ஆா். சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
திருநள்ளாறு பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் அதிகரித்துவருவதால், இப்பகுதியில் உள்ள தேனூா் சமுதாய நலவழி மையத்தில் கரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டுவருகிறது. கரோனா பரிசோதனை பணியை மையத்தின் வெளிப்புறத்தில் அமைக்க ஆலோசனை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, தமது சொந்த செலவில் அதற்கான கூரை அமைத்துக் கொடுத்தாா்.
இங்கு நடைபெறும் பரிசோதனை பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பிறகு அவா் கூறியது: தொற்றுக்கான லேசான அறிகுறி இருப்போரை காரைக்கால் மருத்துவமனைக்கோ அல்லது வீட்டுத் தனிமையிலோ வைக்காமல், திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்க, புதுச்சேரி நலவழித் துறை இயக்குநா், காரைக்கால் துணை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமுதாய நலவழி மையத்தில் 20 கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதிகளும், காரைக்காலுக்கு கிடைக்கும் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளில் ஐந்தை தேனூா் சமுதாய நலவழி மையத்துக்கு அளிக்கவும், அம்பகரத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா் பணியில் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.