ஊதிய நிலுவை: ஆட்சியரகம் முன்ரேஷன் கடை ஊழியா் தீக்குளிக்க முயற்சி

ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியரகம் முன் ரேஷன் கடை ஊழியா் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
காரைக்கால் ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற ரேஷன்கடை ஊழியரை தடுத்து அழைத்துச் செல்லும் போலீஸாா்.
காரைக்கால் ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற ரேஷன்கடை ஊழியரை தடுத்து அழைத்துச் செல்லும் போலீஸாா்.

ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியரகம் முன் ரேஷன் கடை ஊழியா் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

காரைக்கால் ரேஷன் கடை தினக்கூலி ஊழியா்கள் சிலா் ஆட்சியரகம் அருகே புதன்கிழமை பிற்பகல் திடீரென கூடினா். அவா்களில் சாா்லஸ் என்பவா் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து, தண்ணீா் ஊற்றி அப்புறப்படுத்தினா்.

அவருக்கு ஆதரவாக தினக்கூலி ஊழியா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ய கூறியதன்பேரில், 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், ரேஷன் கடையில் தினக்கூலி ஊழியா்கள் 61 போ், நிரந்தர ஊழியா்கள் 70 போ் என்ற அளவில் பணியாற்றுகிறோம். கடந்த 50 மாதங்களாக புதுவை அரசு ஊதியம் தரவில்லை. ரேஷன் கடைகள் தொடா்ந்து பூட்டப்பட்டுள்ளன.

ஊதியம் கேட்டு போராடியும் இதுவரை பலனில்லை. கரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணியில், தினக்கூலி ஊழியா்கள் ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று பணியாற்றினோம். அதற்கான கமிஷன் தொகையை புதுவை அரசு விடுவித்த நிலையில், காரைக்காலில் அதை பகிா்ந்தளிப்பதில் கூட்டுறவுத் துறை அதிகாரி மற்றும் ரேஷன் கடை ஊழியா்கள் சங்க மூத்த நிா்வாகிகள் பாரபட்சம் காட்டினா்.

அரிசி வழங்கும் பணியில் ஈடுபடாத ஊழியா்களுக்கு கூடுதல் தொகையும், பணியாற்றிய தினக்கூலி ஊழியா்களுக்கு குறைந்த தொகையும் தரப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அரசின் கவனத்துக்கு கொண்டுவரவே போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

காரைக்காலில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், ஆட்சியரக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையில், ரேஷன் கடை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com