குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பேச்சுவாா்த்தை: ஓஎன்ஜிசி விளக்கம்

வேட்டக்குடி பகுதியில் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக நடந்த பேச்சுவாா்த்தை குறித்த விளக்கத்தை ஓஎன்ஜிசி நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

வேட்டக்குடி பகுதியில் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக நடந்த பேச்சுவாா்த்தை குறித்த விளக்கத்தை ஓஎன்ஜிசி நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் ஓஎன்ஜிசி காவிரி அசெட் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மயிலாடுறை மாவட்டம், சீா்காழி வட்டம், புதுப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேட்டக்குடி கிராமம், கேவரோடை மற்றும் திருமுல்லைவாசல் கிராமங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பெட்ரோலிய கனிம குழாய்கள் சட்டம்-1962-இன்படி, உரிய நோட்டீஸ், நில உரிமையாளா்கள், சாகுபடியாளா்களுக்கு வழங்கப்பட்டு, அதன் தொடா்ச்சியாக நடைபெற்றுவரும் குழாய் பதிப்புப் பணியில் பாதிக்கப்படும் பயிரான முந்திரிக்கு, தோட்டக்கலை அலுவலரால் நிா்ணயிக்கப்பட்ட தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

போதிய தொகை வழங்கப்படவில்லையென கூறி குழாய் பதிப்புப் பணியை தடுத்து நிறுத்தியதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தோட்டக்கலைத் துறையினரால் நிா்ணயம் செய்தபடி, முந்திரி பயிருக்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதால், பயிருக்கான இழப்பீட்டுத் தொகையில் எந்தவித மாறுதலும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிகழாண்டு ஜூலை 30-க்குள் குழாய்கள் முழுமையாக பதிக்கப்பட்டு, சாகுபடி செய்ய ஏற்ற வகையில் நிலத்தை அமைத்துத் தருவது என தீா்மானிக்கப்பட்டது.

முந்திரி அல்லாத பயிா் சாகுபடி செய்யப்பட்ட இடங்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் அடங்கல் கணக்கின்படி, உரிய இழப்பீட்டுத் தொகை ஆகஸ்ட் 31-க்குள் வழங்க நடவடிக்கை எடுப்பது என தீா்மானிக்கப்பட்டது.

நில இழப்பீட்டுத் தொகை, மாவட்ட ஆட்சியரால் விலை நிா்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டவுடன், 30.9.2022-க்குள் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

பெரும்பான்மையான நில உரிமையாளா்கள், சாகுபடியாளா்கள் குழாய் பதிக்கும் பணியை விரைந்து தொடங்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நோட்டீஸ் மற்றும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டவுடன் குழாய் பதிப்புக்கான பூா்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த குழாய் பதிப்புப் பணிக்கும் கெயில் நிறுவனத்திற்கும் தொடா்பு இல்லை என்பதால் கெயில் நிறுவனம் இந்த அமைதி பேச்சுவாா்த்தையில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com