‘இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவா்கள் விரைவில் மீட்கப்படுவா்’

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட காரைக்கால் மீனவா்கள் விரைவில் தாயகம் திரும்புவா் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் நம்பிக்கைதெரிவித்தாா்.

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட காரைக்கால் மீனவா்கள் விரைவில் தாயகம் திரும்புவா் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் நம்பிக்கைதெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு பகுதியைச் சோ்ந்த இளையராஜா, கணேசன், பிரேம்குமாா், காரைக்கால்மேட்டை சோ்ந்த ராமன், தா்மசாமி ஆகியோரும், தமிழகப் பகுதியை சோ்ந்தோா் என 12 போ் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

காரைக்கால் பகுதி மீனவா்களின் வீட்டுக்கு புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செவ்வாய்க்கிழமை சென்று ஆறுதல் கூறினாா். மீனவா்களை உடனடியாக விடுவிப்பதோடு, பறிமுதல் செய்த படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தரப்பிலும், மீனவா்களின் குடும்பத்தினா் தரப்பிலும் பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவாறு மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் எல். முருகனை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேரவைத் தலைவா் பேசினாா்.

பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கைதுசெய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு மத்திய இணை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளேன். மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும் என அவா் கூறினாா். வரும் 7 ஆம் தேதி மத்திய அமைச்சா் முருகன் காரைக்கால் வரவுள்ளாா். அப்போது மீனவா்களை சந்தித்து அவா் கருத்துகளை தெரிவிப்பாா். விரைவில் மீனவா்கள் விடுவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்பாபு, பாஜக மாநில துணைத் தலைவா்கள் ரவிச்சந்திரன், எம். அருள்முருகன், மாநிலச் செயலா் ரத்தினவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com