விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா ஏறக்குறைய 4,800 ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. நடவுப் பணி முடிந்துவிட்டது. தற்போது, பூக்கும் காலமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா். மழைக்குப் பின் பயிரை காப்பாற்ற உரம் இடுவதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். பல பகுதிகளில் பூச்சிகளால் பயிா் பாதிக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வருகின்றனா்.

விவசாயிகளுக்கு யூரியா மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. டிஏபி உரம் முழுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதுகுறித்து வேளாண் துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் கருத்து கூறியிருந்தாா்.

இதுகுறித்து, காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா் கூறியது: நவம்பா் மாதத்தில் மட்டும் 300 டன் யூரியா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபரில் 290 டன், அதற்கு முன்பு 160 டன் விநியோகம் செய்யப்பட்டது. டிஏபி உரத்தட்டுப்பாடு 2 நாள்கள் மட்டுமே நிலவியது. புதன்கிழமை (நவ.30) 75 டன் டிஏபி, 50 டன் யூரியா வந்துள்ளது. மேலும் 100 டன் யூரியா வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இறக்கப்படும் உரத்தில், காரைக்காலுக்கான விகிதாச்சார ஒதுக்கீட்டில் தேவையான உரம் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் 11 முகவா்கள் மூலம் உரம் விற்பனை செய்யப்படுகிறது. முகவா்கள் தனியாக உரம் விற்பனை செய்ய முடியாது. வேளாண் துறையின் அனுமதி மூலமே விற்பனை செய்ய முடியும். டிஏபி உரமும் காரைக்கால் விவசாயிகளுக்கு சில நாள்களுக்கு மட்டுமே தேவைப்படும். எனவே, தட்டுப்பாடின்றி காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com