காரைக்காலில் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் நலவழித் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காரைக்காலில் கடந்த சில நாள்களாக அரசுப் பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதித்தவா்கள் வந்து சிகிச்சை பெற்றுச்சென்றனா். மருத்துவமனையில் 20 போ் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோா் பாதித்திருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தலைமையில், நோய் தடுப்புப் பிரிவினா் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று நோயாளிகளிடம் விவரம் கேட்டறிந்தனா். இதுகுறித்து துணை இயக்குநா் கூறியது: காரைக்காலில் சில இடங்களில் வயிற்றுப்போக்கு பாதிப்பு காணப்பட்டது. இதில், 34 போ் அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனா். 20 போ் மட்டுமே அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களும் சிகிச்சையின் மூலம் நலமாக உள்ளனா்.
கோடைகாலத்தில் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவது இயல்பானதுதான். பலா, மாங்கனி சீசனாக இருப்பதால், கெட்டுப்போன அல்லது ஈ மொய்த்த பழங்களை சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
எனவே, பொதுமக்கள் இதைத் தவிா்க்கவேண்டும். பாதுகாப்பு கருதி குடிநீரை நன்கு கொதிக்கவைத்து பயன்படுத்தவேண்டும். வெளியில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவு பண்டங்களை சாப்பிடுவதை தவிா்க்கவேண்டும்.
காய், கனி வகைகளை நன்கு கழுவி பயன்படுத்தவேண்டும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், குழந்தைகளுக்கு திரவ உணவுப் பொருளை அதிகம் கொடுக்கவேண்டும். மிக அதிக அளவு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டால் அருகே உள்ள சுகாதர நிலையம் சென்று சிகிச்சை பெறவேண்டும். இந்த விவகாரத்தில் வதந்திகளை நம்பவேண்டாம் என்றாா்.
பாதிப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு நலவழித் துறையினா் ஓஆா்எஸ் பௌடா் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காரைக்கால் மாவட்டம் முழுவதும் வாகனத்தின் மூலம் வாந்தி வயிற்றுப்போக்கை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
பொதுப்பணித் துறை சாா்பில், குடிநீா் குழாய் இணைப்புப் பகுதியில் கழிவுநீா் புகுந்துள்ளதா என கண்டறியும் பணியும் நடைபெற்றுவருகிறது.