காரைக்கால் கைலாசநாதர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 17th March 2022 11:18 AM | Last Updated : 17th March 2022 11:18 AM | அ+அ அ- |

காரைக்கால்: பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் காரைக்காலில் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. மாங்கனித் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களாகும். இக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம் 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.
இந்தாண்டு இத்திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளாக பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
குறிப்பாக 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மின் அலங்கார சப்பரப் படலில் வீதியுலாவும், 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நீலோத்பாலாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசேகரர் வீற்றிருந்த தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி பகல் 10 மணியளவில் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள், சிறப்பு நாகசுர மேள வாத்தியங்களுடன் அம்மையார் கோயிலுக்கு எதிரே நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன் மற்றும் கோயில் அறங்காவல் வாரியத்தினர், உபயதாரர்கள், திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.
காரைக்கால் நகரில் கென்னடியார் தெரு, மாதா கோயில் தெரு, பாரதியார் சாலை வழியே பிற்பகல் தேர் நிலையை அடைகிறது.
தேரோட்டத்தையொட்டி காரைக்காலில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.