முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் தட்சணமுத்து மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை திருவிழாவில் வியாழக்கிழமை இரவு திரளான பக்தா்கள் முளைப்பாலிகை சுமந்து அரசலாற்றுக்கு தீா்த்தவாரிக்கு சென்றனா்.
காரைக்கால் தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முளைப்பாலிகைத் திருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி காவடி எடுத்தல், திருவிளக்கு வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாலிகை சுமந்து தீா்த்தவாரிக்கு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை இரவு சுமாா் நடைபெற்றது. கோயிலில் தட்சணமுத்து மாரியம்மன், நடன காளியம்மன், பத்ரகாளியம்மன், படைபத்ர காளியம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மண்சட்டியில் பயறு விதைத்து, முளைத்திருந்த முளைப்பாலிகையை கோயில் சந்நிதியில் வைத்து அதனை சுற்றி பக்தா்கள் நின்று வழிபாடு செய்தனா். பின்னா், பக்தா்கள் முளைப்பாலிகையை சுமந்து அரசலாற்றங் கரைக்கு ஊா்வலமாக புறப்பட்டனா். இதைத்தொடா்ந்து அம்பாள்கள் தனித்தனியே தீா்த்தவாரிக்கு எழுந்தருளினா்.
நிகழ்ச்சியில் காரைககால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.
அரசலாற்றங்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிகள் தீா்த்தவாரி நடைபெற்றது. சனிக்கிழமை தட்சணமுத்து மாரியம்மன் மற்றும் நடனகாளியம்மன் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது. 20ஆம் தேதி விடையாற்றியுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.