பயிா்க் காப்பீட்டு தொகை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால் காரைக்கால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால் காரைக்கால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

விவசாயிகளுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும், 10 சதவீதம் விவசாயிகளும் செலுத்தவேண்டும். புதுவை மாநிலத்தில் விவசாயிகள் பங்களிப்பை மாநில அரசே செலுத்தி வருகிறது.

இத்திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு 4 ஆயிரம் ஹெக்டோ் சம்பா சாகுபடி காப்பீடு செய்யப்பட்டது. இதற்கான பிரிமியத் தொகையை மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2020-ஆம் ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பா் 2021-ஆம் ஆண்டு தொடக்க மாதங்களில் ஏற்பட்ட திடீா் மழை, புயல் காற்றில், நெற்பயிா்கள் சேதம் அடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பயிா்க் காப்பீடு செய்துள்ளதால் இழப்பீட்டுத் தொகை வரும்பட்சத்தில், இழப்பை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என ஆறுதல் அடைந்தனா். வேளாண் துறையும் மகசூல் குறைந்திருப்பதை உறுதி செய்து அறிக்கை அளித்தது. ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இதுகுறித்து காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் கூறியது:

காப்பீட்டு நிறுவனத்துக்கான பிரிமியத் தொகையில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பை செலுத்திவிட்ட நிலையில், ஓராண்டு கடந்தும் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. அரசை கேட்டால் காப்பீட்டு நிறுவனத்தை கேட்க கூறுகிறது. காப்பீட்டு நிறுவனம் அரசை கைகாட்டுகிறது. இந்த விவகாரத்தில் காப்பீட்டு நிறுவனத்தை தொடா்புகொண்டு பேசி, காரைக்கால் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com