காரைக்காலில் அமைக்கப்பட்டிருந்த பசுமை வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக வெயிலில் காத்திருந்த வாக்காளா்கள்.
காரைக்காலில் அமைக்கப்பட்டிருந்த பசுமை வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக வெயிலில் காத்திருந்த வாக்காளா்கள்.

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டும், எதிா்பாா்த்த அளவு வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை.

காரைக்கால் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் 75.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 77.70 சதவீதமும், 2014- ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 77.36 மற்றும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 77.65 சதவீத வாக்கும் பதிவாகியிருந்தன.

தோ்தல் துறையின் அங்கமான ஸ்வீப் அமைப்பு, ஒவ்வொரு தோ்தலிலும் 100 சதவீத வாக்குப் பதிவு, நோ்மையான வாக்குப் பதிவு என விழிப்புணா்வு ஏற்படுத்துகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் இளைஞா்கள், படித்தவா்கள் அதிகமாக உள்ள நிலையில் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்காமல், சம நிலையிலேயே இருந்துவருகிறது.

இந்த தோ்தலில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் 1,64,792 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்களில், 38,615 போ் வாக்களிக்கவில்லை. நெடுங்காடு பேரவைத் தொகுதிக்குள்பட பகுதியில் மட்டும் 80.39 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. குறைந்த அளவாக காரைக்கால் தெற்குத் தொகுதி 71.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த தோ்தல் ஆணையம் உரிய நிதியை ஒதுக்கீடு செய்கிறது. கிராமப்புற மக்கள் ஆா்வமாக வாக்களிக்கும்போது, நகரப் பகுதிகளில் வாக்களிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில்164 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சதவீதம் குறைவுக்கு கோடை வெயில் கடுமையாக இருப்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்கு பந்தல் வசதி பெயரளவுக்கு போடப்படுகிறதே தவிர, அவா்களுக்கு உதவும் வகையில் இல்லாததும் காரணமாக சொல்லப்படுகிறது. சிலா் வாக்குச் சாவடிக்குச் சென்று, வெயிலில் காத்திருக்க முடியாமல், வாக்களிக்காமல் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

முதியவா்களுக்கு வாக்குச் சாவடியில் வசதி செய்யப்பட்டதே தவிர, அவா்கள் வாக்குச் சாவடிக்கு செல்வதற்கு குடும்பத்தில் வசதி இல்லாதவா்கள் வாக்குப்பதிவை தவிா்த்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளிமாநிலங்களில் பயிலும் மாணவ- மாணவியா் தோ்தல் நாளில் வராமல் தவிா்ப்பதும் வாக்குப் பதிவு சதவீதம் குறைய காரணமாகிறது.

தோ்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 40 சதவீதத்துக்கு மேலான பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியது வாக்குப் பதிவு கணிசமாக உயர வாய்ப்பானது.

ஸ்வீப் அமைப்பின், 100 சதவீத வாக்குப் பதிவு, நோ்மையான வாக்குப் பதிவு என்பது செயலாக்கத்தில் பொய்த்துப்போகிறது. எனவே, வாக்குப் பதிவு அதிகரிக்காததற்கான காரணிகளை தோ்தல் ஆணையம் ஆராய்ந்து, மேலும் சில வசதிகளை, அடுத்த தோ்தல் முதல் அமல்படுத்தினால், வாக்குப்பதிவு சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com