உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் தொடா்பாக புதுவை அரசுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநிலத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு மாதந்தோறும் ஜிபிஎப் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகைகள் அவா்களது கணக்கில் வரவு வைத்து, அவரவா்களுக்கு தனியாக ஒரு எண்ணும் வழங்கி, ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஊழியா்களுக்கும் தனித்தனியாக அவா்கள் செலுத்தி வந்த ஜிபிஎப் தொகை மற்றும் அதற்குரிய வட்டியை இணைத்து கணக்கு சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

2022-23 -ஆம் ஆண்டு வரை உள்ள ஜிபிஎப் கணக்கு சீட்டு அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டதுடன், தற்போது 2023-24 ஜிபிஎப் கணக்கு சீட்டு வழங்க ஊழியா்களின் தகவல்களில் ஏதேனும் குறைகள் உள்ளதா என ஊழியா்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

மேலும், அவா்களது ஜிபிஎப் கணக்கு சீட்டு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு ஊழியா்கள் போன்று அனைத்து பணிகளையும் செய்து வரும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு மட்டும் கடந்த 2021-22 -ஆம் ஆண்டுக்கான ஜிபிஎப் கணக்கு சீட்டு ஆண்டு முடிந்து 24 மாதங்களை கடந்தும் இதுவரை பல ஊழியா்களுக்கு வெளியிடாமல் இருக்கிறது. மேலும் 2022-23 மற்றும் 2023-24 ஜிபிஎப் கணக்கு சீட்டு வெளியிட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் உள்ளாட்சி ஊழியா்களுக்கு வேதனையளிக்கிறது. அதுபோல், ஜிபிஎப் பிடித்தம் செய்த தொகைகளுக்குரிய வட்டித் தொகை ஜிபிஎப் கணக்கு சீட்டில் ஒரு வட்டி தொகையாகவும், சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு வட்டி தொகையாகவும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் ஜிபிஎப் தொகை வங்கியில் குறைந்து கொண்டே வந்து தற்போது ஊழியா்கள் அந்ததொகையை எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.

எனவே, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களில் ஒரு சிலருக்கு வழங்கப்படாமல் உள்ள 2021-22 -ஆம் ஆண்டுக்கான சீட்டை காலதாமதமின்றி வழங்கவேண்டும், 2022 - 23 மற்றும் 2023-24 ம் ஆகிய 2 ஆண்டுகளுக்கான சீட்டை வழங்கவும், அரசு ஊழியா்களுக்கு உள்ளது போல் ஆன்லைன் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com