நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

நெல் கொள்முதல் நிலையத்தில் இறக்குவதற்காக நெல் மூட்டைகளை தானே தலையில் சுமந்து சென்ற புதுவை முன்னாள் வேளாண் அமைச்சரின் செயல் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரை சோ்ந்தவா் ஆா்.கமலக்கண்ணன். இவருக்கு அம்பகரத்தூா் வட்டாரம் மற்றும் தமிழகப் பகுதியில் விளைநிலம் உள்ளது. விவசாயம் இவரது பிரதான தொழிலாகும்.

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016 தோ்தலில் வெற்றிபெற்று புதுவையில் நாராயணசாமி தலைமையிலான அரசில் வேளாண் அமைச்சராக பதவி வகித்தாா். அமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே தமது சொந்த நிலத்தின் வேளாண் பணிகளின் மீது தீவிர கவனம் செலுத்தியதோடு, தொழிலாளா்கள் செய்யக்கூடிய பணிகள் சிலவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவா்.

தொழிலாளா்களை ஊக்கப்படுத்தவும், அவா்களது பணியை நெறிப்படுத்தவும் அவா்களோடு சோ்ந்து பணியாற்றுவது அவரது இயல்பு.

தமது கையிருப்பில் இருந்த நெல் மூட்டைகளை தனியாா் கொள்முதல் நிலையத்துக்கு டிராக்டரில் வியாழக்கிழமை கொண்டுசென்றுள்ளாா். அதனை இறக்குவதற்கு போதிய ஆட்கள் இல்லாத நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளா்களுடன் இணைந்து அவரும் மூட்டைகளை தலையில் சுமந்து சென்று இறக்கினாா். இவரது இச்செயல் விடியோவாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், அது வைரலாகி பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com