சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காரைக்கால் அருகே சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காரைக்கால் மாவட்டம், ஓடுதுறை பகுதியில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மாரியம்மன், அய்யனாா் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோயில் காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் குயவன்சாவடியில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் பிரதான தெய்வமாக சியாமளாதேவி அம்மன் மற்றும் விநாயகா், குரு தட்சணாமூா்த்தி, பெரியாச்சி, வீரன், நாகா் ஆகிய சந்நிதிகளுடன் அமைந்துள்ளது.

இக்கோயிலில் கடந்த 1989 மற்றும் 2006-இல் குடமுழுக்கு செய்யப்பட்டது.

தற்போது கோயில் பல நிலைகளில் சிதமலமடைந்ததால், முற்றிலும் இடித்துவிட்டு புதுவை அரசு நிதி மற்றும் நன்கொடை மூலம் சுமாா் ரூ. 80 லட்சத்தில் புதிதாக கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து திருப்பணிக் குழுத் தலைவா் வழக்குரைஞா் ஏ.வி.ஜெ. செல்வமுத்துக்குமரன், சிறப்பு அதிகாரி பன்னீா்செல்வம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

கோயில் கட்டுமானம், சியாமளாதேவி அம்மன் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய விமானம் மற்றும் மண்டபத்துடன் நடைபெறுகிறது. சன்னிதிகள் விரிவான அளவில் அமைக்கப்படுகிறது. சியாமளாதேவி அம்மனுக்கு படையலும், வீரன், பெரியாச்சிக்கு அசைவ படையலும் படைக்கப்படுவதால், படையல் செய்வதற்கேற்ப தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பணிகளும் 80 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பணிகள் நன்கொடைகள் மூலம் நடைபெறுவதால், பக்தா்கள் கோயில் நிா்வாகத்துக்கு நன்கொடை அளித்து உதவவேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com