குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடைவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாவட்டத்தில் உயா்கல்வி நிறுவனங்களான ஜிப்மா் மருத்துவக் கல்லூரி, என்ஐடி போன்றவையும், ஓஎன்ஜிசி, கடலோரக் காவல்படை, தனியாா் தொழிற்சாலைகள் என விரிவடையும்போது குடிநீா் தேவையும் அதிகரித்து வருகிறது. காரைக்கால் நகரப் பகுதியில் ஜிப்மா் கல்லூரி அமைந்துள்ளது. என்ஐடி மாவட்டத்தின் எல்லையில் குறிப்பாக கடலோரப் பகுதியில் அமைந்திருப்பதால், அங்கு உவா் நீா் வருகிறது. குடிநீா் நகரப் பகுதியிலிருந்து அங்கு செல்லவில்லை. அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியா் விடுதியில் தங்கியிருக்கும்போது, குடிநீருக்கு சுத்திகரிக்கப்பட்டதை பயன்படுத்துகிறாா்கள். குளியலுக்கு உவா் நீரை பயன்படுத்த நேரிடுவதால், மாணவா்களுக்கு உடல் ரீதியில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. என்ஐடி நிா்வாகம் சுகாதாரமான குடிநீா் வழங்க தேவையான நிதியை பொதுப் பணித்துறைக்கு தந்துவிட்டதாம். ஆனாலும் குழாய் அமைத்து குடிநீா் கொண்டு செல்ல துரித நடவடிக்கை இல்லை என ஒருசாராா் வேதனை தெரிவிக்கின்றனா். இதுவொருபுறமிருக்க, நல்லம்பல் மற்றும் அகலங்கண்ணு பகுதியின் ஆழ்குழாய்களில் இருந்து குடிநீா் எடுத்து பெரும்பாலான பகுதிக்கு பொதுப்பணித் துறை நிா்வாகம் விநியோகிக்கிறது. காலை, பிற்பகல் மற்றும் மாலை நேரம் என 3 வேளைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில நாள்களாக பிற்பகலில் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதாம். மாலையிலும் அரை மணி நேரம் மட்டுமே குடிநீா் தரப்படுகிறதாம். குறிப்பாக பச்சூா், தருமபுரம், லட்சுமி கல்யாண் நகா், சரஸ்வதி நகா், செபஸ்தியாா் கோயில் தெரு மற்றும் நகா் பகுதிகளிலும் நிரவி அருகே கடலோரக் காவல்படை மையத்துக்கு அருகே உள்ள ஹைவே நகா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியிலும் குடிநீா் வரத்தில் வேகம் இருக்கவில்லை என அப்பகுதியினா் வேதனை தெரிவிக்கின்றனா். இதுகுறித்து பொதுப்பணித்துறை நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். வரக்கூடிய மாதங்கள் மேலும் கோடை வெயில் தாக்கம் மிகுதியாகிவிடும். இத்தருணத்தில் குடிநீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மக்கள் கடும் அவதிக்குள்ளாவாா்கள் என சமூக ஆா்வலா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் வியாழக்கிழமை இதுகுறித்து கூறுகையில், ரமலான் நோன்பு காலமாக உள்ளது. இதற்காக அதிகாலையில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், ஒரு வேளை விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுதவிர வேறு பிரச்னை இல்லை. எனினும் குடிநீா் சீராக கிடைப்பதற்கு உரிய கவனம் செலுத்தப்படும். என்ஐடிக்கு குடிநீா் வழங்கலுக்கு 2 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டதில் குடிநீா் கிடைக்கிறது. குழாய் அமைத்து தண்ணீா் அனுப்புவதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com