திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாா். சனிக்கிழமைகளில் இவரை தரிசனம் செய்ய தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

நிகழ்வாரம் சனிக்கிழமை (மே 4) அதிகாலை முதலே கட்டணமில்லா வரிசை, கட்டண வரிசையில் ஏராளமான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு காத்திருந்தனா். கோயில் நடை திறந்தவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவா் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சனீஸ்வர பகவானை வழிபட்டனா். சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

கத்திரி வெயில் தொடங்கிய நிலையிலும், வெயிலை பொருட்படுத்தாமல் அதிகமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.

எனினும், திருநள்ளாறு செல்லவும், திருநள்ளாற்றில் இருந்து கும்பகோணம், புதுச்சேரி பகுதிக்கு செல்லவும் வழக்கமான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால், ஏராளமானோா் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது. அதனால் சனிக்கிழமைகளில் மட்டும் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com