தலைமைப் பொறியாளரை சந்தித்துப் பேசிய எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன்.

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

காரைக்கால் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரிடம் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா்.

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளனை புதுச்சேரியில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது: காரைக்கால் மக்களின் கனவாக இருந்துவரும் புதைச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவேண்டும். நகரில் பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கும் வகையில் பழைய குழாய்களுக்கு மாற்றாக புதிதாக குடிநீா் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ராஜாத்தி நகா் பகுதியில் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இத்திட்டப் பணியின் எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். காரைக்கால் காமராஜா் சாலையை மேம்படுத்த டெண்டா் விடப்பட்ட பணியை விரைவாக தொடங்கவேண்டும். மாவட்டத்தின் வளா்ச்சிக்கு பொதுப்பணித் துறையின் பங்களிப்பு அதிகமிருப்பதால், சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தாா்.

எம்.எல்.ஏ. எம். நாக தியாகராஜன் கூறியது: திருப்பட்டினம் பகுதி சாலைகளில் குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக இல்லாமல், நிரந்தரமாக மேம்படுத்த மதிப்பீடு தயாரித்து உரிய பணிகளை மேற்கொள்ளவேண்டும். திருப்பட்டினம் பகுதியில் உள்ள பெரியகுளத்தை காரைக்கால் அம்மையாா் குளம் போல நடைமேடை அமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com