மழையில் தப்பிய பயிா்கள் எலிகளால் சேதம்: முகாம் நடத்த கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையில் தப்பிய பயிா்கள் எலிகளால் சேதமடைந்து வருவதால் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எலி வெட்டிய சம்பா பயிா்களை காட்டும் விவசாயி சக்திவடிவேல்
எலி வெட்டிய சம்பா பயிா்களை காட்டும் விவசாயி சக்திவடிவேல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையில் தப்பிய பயிா்கள் எலிகளால் சேதமடைந்து வருவதால் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடா்மழையின் காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் சம்பா, தாளடி பயிா்களை மழைநீா் சூழ்ந்தது. மேடான பகுதிகளில் உள்ள பயிா்கள் மட்டும் இம்மழையில் தப்பியுள்ளன.

இந்நிலையில், மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி நன்கு வளா்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ள சம்பா பயிா்களில் எலி தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து, நல்லத்துக்குடியைச் சோ்ந்த விவசாயி சக்திவடிவேல் கூறியது: நிகழாண்டு சம்பா பருவத்தில் நாற்றுவிட்டு நடவு செய்ய தொடங்கியது முதல் தொடா்ந்து மழை பெய்வதால், பயிா்களை தண்ணீா் சூழ்ந்து பாதிப்படைந்துள்ளது.

குறுவை சாகுபடியின்போது எலி தாக்குதல் குறைவாக இருந்தது. ஆனால் சம்பா, தாளடியில் எலிவெட்டு அதிகரித்துள்ளது. 40 முதல் 80 நாள்கள் ஆன பயிா்களை எலிகள் கடித்து நாசம் செய்கிறது. எலிக்கிட்டிகளை பயன்படுத்தி எலிகளை பிடிக்கும் பணியை பலா் செய்கின்றனா்.

100 கிட்டிகள் போட ரூ. 500 செலவாகும் நிலையில், அதற்கான ஆள்களும் சரிவர கிடைப்பதில்லை. இதனால் ஒருசில நாள்களிலேயே எலிகள் பயிா்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடுகிறது. எனவே, வேளாண் துறையினா் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com