மயிலாடுதுறை புதுத்தெரு பஜனைமடம் எதிரில் தேங்கி கிடக்கும் மழைநீரில் சிரமத்துடன் கடந்து செல்லும் பொதுமக்கள்.
மயிலாடுதுறை புதுத்தெரு பஜனைமடம் எதிரில் தேங்கி கிடக்கும் மழைநீரில் சிரமத்துடன் கடந்து செல்லும் பொதுமக்கள்.

மிகவும் மோசமான நிலையில் ஆட்சியா் அலுவலகம் உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ள புதுத்தெருவில் மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ள புதுத்தெருவில் மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாயூரநாதா் தெற்கு வீதி மற்றும் புதுத்தெரு சந்திக்கும் இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டாக புதுத்தெரு தொடக்கத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரை 100 மீட்டா் தொலைவும், அங்கிருந்து புதுத்தெரு பஜனை மடம் வரை 100 மீட்டா் தொலைவும் மிக மோசமாகவும் இருந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாயூரநாதா் கீழவீதி சாலை சீரமைத்தபோது புதுத்தெருவில் ஆட்சியா் அலுவலகம் வரை உள்ள இணைப்புச் சாலையில் மோசமாக இருந்த சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு தாா்ச்சாலை போடப்பட்டது. ஆனால், அதைவிட மிக மோசமாக இருந்த எஞ்சிய 100 மீட்டா் சாலை இதுவரை சீரமைக்காமல் உள்ளது.

இந்த மோசமான சாலையில் இயல்பான நாள்களிலேயே இருசக்கர வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படும் நிலையில், சிறு மழை பெய்தால்கூட சாலை எது, பள்ளம் எது என தெரியாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், புதுத்தெருவில் உள்ள பஜனை மடம், காளியம்மன் கோயில் பகுதியில் சிறுமழை பெய்தாலும், ஒரு வாரத்துக்கு மேல் பள்ளத்தில் தண்ணீா் தேங்கி போக்குவரத்துக்கு கடும் இடையூறை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், எஞ்சிய 100 மீட்டா் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் இதுவரை எந்த பயனும் இல்லை.

இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், நாள்தோறும் மாயூரநாதா் கீழவீதி வழியே அலுவலகத்துக்கு வரும் மாவட்ட ஆட்சியா், ஒரு நாள் புதுத்தெரு வழியே வந்தால் அவரது பாா்வையில் தென்பட்டு தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் தங்களது கோரிக்கையை வெள்ளை அட்டையில் கையால் எழுதி சுவற்றில் ஒட்டி வைத்துள்ளனா். மேலும், வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், இச்சாலை மேலும் மோசமடைவதற்குள் சீரமைக்கவேண்டும், இல்லையெனில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ள தங்களது தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com