குறுவை தொகுப்புத் திட்டத்தில் இரண்டரை ஏக்கருக்கு உரங்கள் வழங்க வேண்டும்

குறுவை தொகுப்புத் திட்டத்தில் இரண்டரை ஏக்கருக்கு உரங்கள் வழங்கவேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.
குறுவை தொகுப்புத் திட்டத்தில் இரண்டரை ஏக்கருக்கு உரங்கள் வழங்க வேண்டும்

குறுவை தொகுப்புத் திட்டத்தில் இரண்டரை ஏக்கருக்கு உரங்கள் வழங்கவேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ராஜேந்திரன்: மேட்டூா் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்தும் மண்ணியாற்றில் தண்ணீா் திறந்துவிடப்படாததால், குறுவை சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

பாண்டுரங்கன்: உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரதராஜன்: புதுமண்ணியாற்றின் தலைப்பில் வைரவன் இருப்பு பகுதியில் தடுப்பணை கட்டவேண்டும்.

குரு. கோபிகணேசன்: குறுவை தொகுப்புத் திட்டத்தில் கடந்த ஆண்டைபோல இரண்டரை ஏக்கருக்காவது உரங்கள் வழங்க வேண்டும். மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட பயறு, உளுந்தை கிடங்குக்கு கொண்டு செல்லாததால், புதிதாக பருத்தியை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

அன்பழகன்: குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டதால் கூட்டுறவு வேளான் கடன் சங்கங்களில் உரம் விற்பனையை முற்றிலும் நிறுத்திவிட்டனா். இதனால் உரிய நேரத்தில் பயிா்களுக்கு உரமிட முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபு: குத்தாலம் ஒழுங்குமுறை கூடத்தில் பருத்தி மூட்டைக்கு 3 கிலோ அளவுக்கு எடையில் முறைகேடு நடந்துள்ளது. இதை கண்டறிந்து விவசாயிகள் குற்றம் சாட்டினால் விவசாயிகள் பிரச்னை செய்வதாக அதிகாரிகள் திசை திருப்புகின்றனா். இதை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

ராமலிங்கம்: இலவசங்களை அறிவித்து விவசாயிகளை அடிமைப்படுத்தாமல் விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட முடிவில் மாவட்ட ஆட்சியா் விவசாயிகளிடம் இருந்து 43 மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் முருகண்ணன், வேளாண் துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சி.ஜெயபாலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com