கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் யார்?

தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம்

கும்பகோணம்: கடந்த 1866 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கும்பகோணம் நகராட்சி 4 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதனால், வார்டுகளின் எண்ணிக்கையும் 45லிருந்து 48ஆக உயர்ந்தது. கும்பகோணம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் நகராட்சியில் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக வென்றது.

எனவே, மாநகராட்சியின் முதல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக ஈடுபட்டது. திமுக கூட்டணியில் திமுக 39 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் போட்டியிட்டது.

இதில் திமுக 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் என திமுக கூட்டணி மொத்தம் 42 வார்டுகளில் கைப்பற்றியது. ஆனால், 47 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக 3 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தவிர, சுயேச்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக பிடித்துள்ளது. இப்போது, இந்த முதல் மேயர் பதவியைப் பெற திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.

சுப. தமிழழகன்:

திமுகவின் கும்பகோணம் மாநகரச் செயலராக உள்ள சு.ப. தமிழழகன் 26-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் நகர் மன்றத் தலைவராக இருந்தார். இதன் பின்னர் 2011ஆம் ஆண்டில் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவரது தாயார் மதுரம் பத்மநாபன் முன்பு கும்பகோணம் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். இவரது தந்தை பத்மநாபன் திமுக நகரச் செயலராகப் பதவி வகித்தவர். முதல் மேயர் பதவிக்கு தமிழழகனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி சு.ப. தமிழழகனுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இரா. அசோக்குமார் | சுப. தமிழழகன்
இரா. அசோக்குமார் | சுப. தமிழழகன்

இரா. அசோக்குமார்:

இதேபோல, 31-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா. அசோக்குமாரும் கும்பகோணத்தின் முதல் மேயர் பதவியைப் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் திமுகவில் கும்பகோணம் தெற்கு ஒன்றியச் செயலராக உள்ளார். இவர் ஏற்கெனவே தாராசுரம் பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, தாராசுரம் இணைக்கப்பட்டதால், தற்போது மேயர் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி அசோக்குமார் கும்பகோணம் ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். ஏற்கெனவே மனைவி ஒன்றியக் குழுத் தலைவர் இருக்கும்போது, இவருக்கு மேயர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வியும் தொண்டர்களிடையே நிலவுகிறது. என்றாலும், மேயர் பதவியைப் பெறுவதற்காக ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார்.

ஆனால், கும்பகோணம் மேயர் பதவி யாருக்கு என்பதைக் கட்சி மேலிடம்தான் முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என்கின்றனர் திமுகவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com