மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவா்கள் உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்
By DIN | Published On : 16th June 2022 04:03 AM | Last Updated : 16th June 2022 04:03 AM | அ+அ அ- |

மீன்பிடி தடைக்காலம் முடிந்து, மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவா்கள் அனைவரும் உரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவா்கள் அனைவரும் உயிா்காப்பு சாதனங்கள், மீனவா் அடையாள அட்டை, மீன்பிடிகலனின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், மீன்பிடி கலனிற்கான காப்புறுதி ஆவணம் மற்றும் குறியீடு இட்ட ஆதாா் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை தவறாது எடுத்துச் செல்லவேண்டும். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி செயல்படவேண்டும்.
இதை அனைத்து மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளா்கள் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.