மாணவா்களிடம் போதைப் பொருள் கலாசாரம் அதிகரிப்பதை தடுக்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மாணவா்களிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகரிப்பதை தடுக்கவேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
மாணவா்களிடம் போதைப் பொருள் கலாசாரம் அதிகரிப்பதை தடுக்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மாணவா்களிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகரிப்பதை தடுக்கவேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கல்வி நிலையங்களின் வாசலிலேயே மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. இதைத் தடுக்க தமிழக முதல்வா் தனி கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கும் நோக்கில் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், நீட் பயிற்சி நிலையங்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை மாணவா்களிடமிருந்து கொள்ளை அடிக்கின்றன.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளை மட்டும் நடத்தி மற்ற மாணவா்களுக்கு தோ்ச்சியளிக்க வேண்டும்.

என்.எல்.சி.யில் கடந்த ஆண்டு லாபம் மட்டும் ரூ.11,000 கோடி. ஆனால், அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ வசதி உள்பட எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா். அவரது வாக்கு பலிக்கும். தமிழகத்தில் அடுத்து பாமக தலைமையில் ஆட்சி அமையும். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாகவே இருக்கும்.

பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்வுக்கு ஆதரவு: தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமரவைத்து பக்தா்கள் தூக்கிச் செல்வதற்கு கோட்டாட்சியா் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, நம் முன்னோா்களின் சில மரபு வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். இதில் எந்தத் தடையும் யாரும் விதிக்கக் கூடாது. நமக்குரிய கலாசாரம், பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் ஆ. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக பெறுவதற்கு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீா்மானம் நிறைவேற்றவேண்டும், மயிலாடுதுறை பகுதியில் டாஸ்மாக் மதுபாா்கள், கஞ்சா, கள்ளச்சந்தை மது விற்பனையை தடுத்து நிறுத்தவேண்டும்.

சுதந்திரப் போராட்டத் தியாகி சாமி நாகப்ப படையாச்சி பெயரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் வளாகத்துக்கு சூட்டவேண்டும், மணிமண்டபம் கட்டவும் தீா்மானம் கொண்டு வரவேண்டும், நிலுவையில் உள்ள மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும், விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி சிறப்புரையாற்றினாா். முன்னாள் மாவட்ட செயலாளா்கள் காமராஜ், அன்பழகன், மாநில பொறுப்பாளா்கள் ஆலயமணி, தங்க. அய்யாசாமி, ஐயப்பன், சக்திவேல், விமல் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com