மழை பாதிப்பு: குயவன் வாய்க்கால் பாசன நிலங்களில் மறு நடவுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கொள்ளிடம் அருகே குயவன் வாய்க்கால் பாசன கிராமங்களில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், மறு நடவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே குயவன் வாய்க்கால் பாசன கிராமங்களில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், மறு நடவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் அருகே எலத்தூா் கிராமத்தில் பிரதான தெற்குராஜன் வாய்க்காலிலிருந்து குயவன் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக உள்ளது. இதன் கிளை வாய்க்கால்களாக பெரிய வாய்க்கால், கோழிபத்து வாய்க்கால், மானிய வாய்க்கால், ராமன் வாய்க்கால், தாமரைகுல வாய்க்கால், தோப்புதெரு வாய்க்கால், மேலேரி மற்றும் கீழேரி வாய்க்கால், பள்ளன் வாய்க்கால், படுகை வாய்க்கால் போன்றவை உள்ளன.

இதன்மூலம் வடரங்கம், சென்னியநல்லூா், பூங்குடி, மாதிரிவேளூா், படுகை, பட்டியமேடு, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. பின்னா் கீரங்குடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குயவன் வாய்க்கால் கலக்கிறது.

இந்நிலையில் குயவன் வாய்க்கால் கடந்த 3 ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் மழைநீா் விரைவாக வடிய வழியின்றி சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டுள்ள சுமாா் 5000 ஏக்கா் நிலங்களில் குளம்போல் தேங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக இளம் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பூங்குடி விவசாய சங்க பொருளாளா் மீசை கலையரசன் கூறியது:

விவசாயிகள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்துள்ள நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மறுநடவு செய்யும் நிலை ஏற்பட்டால் அதற்கு தேவையான முழு நிவாரணம் வழங்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com