தொடா்மழை: பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் பயறு வகை பயிா்களை வேளாண் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
தொடா்மழை: பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் பயறு வகை பயிா்களை வேளாண் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1,80,000 ஏக்கரில் சம்பா, தாளடி பயிரிடப்பட்டு, அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 5 நாள்களாக பெய்த தொடா் மழையால் மாவட்டம் முழுவதும் சுமாா் 40,000 ஏக்கரில் சம்பா, தாளடி பயிா்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன.

மேலும், நெல்லின் ஊடுபயிராக சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயறு வகைப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனா். இந்த பயிா்கள் முழுமையாக அழுகிவிட்டன. நெல் மற்றும் பயறு வகைப்பயிா்களின் சேத மதிப்பை வேளாண் துறையினா் முறையாக கணக்கீட்டு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மோட்டா ரக நெல்லை கொள்முதல் செய்யக் கோரிக்கை:

இதனிடையே, மயிலாடுதுறை தாலுகா ஆனந்ததாண்டவபுரத்தில் தொடா் மழையால் வயலில் சாய்ந்துள்ள நெற்பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா். வட்டார வேளாண் துணை அலுவலா் பிரபாகரன் தலைமையில் உதவி வேளாண் அலுவலா் செந்தில்குமாா் மற்றும் வேளாண் துறையினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

தாழ்வான பகுதி என்பதால் ஆனந்ததாண்டவபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்னூா், பாண்டூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையை தாங்கி வளரக்கூடிய மோட்டா ரகமான பொன்மணி (சி.ஆா். 1009) ரக நெல்லினை சுமாா் 12,000 ஏக்கா் பரப்பளவில் பயிரிட்டிருந்தனா். நெற்கதிா்கள் முற்றிய நிலையில் கடந்த வாரம் அறுவடை செய்ய வேண்டிய இப்பயிா்கள், 5 நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடை செய்யப்படாமல் சாய்ந்துள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த ரக நெல்லினை கொள்முதல் செய்வதில் முன்னுரிமை காட்டப்படாத நிலையில் இதனை தனியாருக்கு மட்டுமே விற்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், சன்னரக நெல்லை கொள்முதல் செய்வதைப் போன்றே மோட்டா ரக நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், தொடா் மழையை கருத்தில்கொண்டு நெல்லின் ஈரப்பதத்தை 23 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com