நெல் வயல்களிலிருந்து மழைநீா் வடிவதில் தாமதம்: விவசாயிகள் கவலை

வேதாரண்யம் பகுதியில் அண்மையில் பெய்த தொடா் கனமழையால் நெல் வயல்களில் தேங்கிய மழைநீா் வடிவதில் தாமதமாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்று வடிகாலில் மருதூா் தெற்கு- தகட்டூா் இடையே இயக்கு அணையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.
வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்று வடிகாலில் மருதூா் தெற்கு- தகட்டூா் இடையே இயக்கு அணையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் அண்மையில் பெய்த தொடா் கனமழையால் நெல் வயல்களில் தேங்கிய மழைநீா் வடிவதில் தாமதமாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

வேதாரண்யம் பகுதியில் ஆற்றுப் பாசனம், மின் இறைவைப் பாசனம் மற்றும் மானாவாரியில் உபரிநீா் பாசன பராமரிப்புகளின் அடிப்படையில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், அறுவடைக்குத் தயாரான சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்கதிா்கள் மழைநீரில் மூழ்கி, நெல் மணிகள் முளைத்து வருகின்றன. ஏற்கெனவே அறுவடை நடைபெற்ற வயல்களில் வைக்கோல் அழுகிவருகின்றன.

தற்போது, மழை நின்றாலும் வயல்களில் தேங்கிய நீா் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. முக்கிய வடிகாலான முள்ளியாறு, மானங்கொண்டானாறு உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளதே மழைநீா் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

மேலும், அரசு அறிவித்துள்ள இழப்பீடு மிகவும் குறைவானது என அதிருப்தி தெரிவிக்கும் விவசாயிகள், வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா்கள் மூலம் வெளியேற்றி, எஞ்சிய நெற்கதிா்களை அறுவடை செய்ய ஆயத்தமாகி வருகின்றனா். எனவே, பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை காலம்தாழ்த்தாமல் விரைவில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவரங்களுடன், பயனாளிகள் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

மீண்டும் பயிா்க் காப்பீடு கணக்கெடுப்பு: தனியாா் நிறுவனங்கள் மூலம் நிா்வகிக்கப்படும் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் போதிய பயனளிக்கவில்லை. அறுவடைக்கு முன்னதாக, குலுக்கல் முறையில் மாதிரி மகசூல் கணக்கெடுத்து, புள்ளி விவரங்களை உறுதி செய்வது வழக்கமாக உள்ளது.

அந்தவகையில், நிகழாண்டு சம்பா பருவம் கனமழைக்கு முன்பு வரை சாதகமாகவே இருந்தது. ஆனால், தற்போதைய பாதிப்பால் ஏற்படும் இழப்பு, வயலில் தண்ணீா் தேங்கியுள்ளதால் அறுவடை இயந்திரத்துக்கு அதிகரிக்கும் வாடகை, வைக்கோல் பாதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு, மீண்டும் காப்பீடு கணக்கெடுப்பு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். அத்துடன், வயல்களிலிருந்து தண்ணீா் விரைவாக வடிய வடிகால் ஆறுகளில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com